உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் படுகொலை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 5, 2011

பாக்கித்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் தலைநகர் இசுலாமாபாதில் உள்ள அவரது வீட்டுக்கருகில் வைத்து அவரது மெய்க்காப்பாளர் ஒருவரால் நேற்றுச் சுட்டுக்கொல்லப்பட்டார். பாக்கித்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனைச் சட்டத்தை இவர் எதிர்த்து வந்ததனாலேயே அவரைச் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார்.


படுகொலை செய்யப்பட்ட பஞ்சாப் ஆளுநர் சல்மான் டசீர்

இவரது படுகொலைக்கு உலகத் தலைவர்கள் பலர் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். ஆளுநர் சல்மான் டசீர் சகிப்புத் தன்மையைப் பரப்பியவர் என அமெரிக்க அரசுச் செயலர் இலறி கிளிண்டன் தெரிவித்தார்.


ஆளும் பாக்கித்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினரான சல்மான் டசீர் (அகவை 66) அண்மையில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட கிருத்தவப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்ததால் அந்நாட்டில் அவர் சர்ச்சைக் குரியவராகப் பார்க்கப்பட்டார்.


கோசார் சந்தை அருகில் தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கும் போது அவரது மெய்க்காப்பாளர் ஒருவரினால் 26 தடவை சுடப்பட்டார். கொலையாளி உடனடியாகவே கைது செய்யப்பட்டார். மாலிக் காதிரி என்ற அக்கொலையாளி தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக பாக்கித்தானில் உட்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தெரிவித்தார். மத நிந்தனைச் சட்டத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை சல்மான் டசீர் ஆதரித்து வந்ததாலேயே அவரைக் கொலைசெய்ததாக அவர் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.


"இக்கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா என இப்போது விசாரித்து வருகிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.


சில இசுலாமியத் தலைவர்கள் இப்படுகொலையை வரவேற்றதோடு, சல்மான் டசீரின் இறுதி நிகழ்வுகளில் எவரையும் கலந்து கொள்ள வேண்டாம் என அழைப்பு வித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மூலம்

[தொகு]