தமிழ்நாடு அரியலூரில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 1, 2009, சென்னை:


தமிழ்நாட்டில் அரியலூர் அருகே உள்ள கிராமத்தில் கல்லாகிய நூற்றுக்கணக்கான டைனோசோர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 65 மில்லியன் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.


காவிரி வடிநிலப் பகுதியில் கொள்ளிடம்-வெள்ளாற்றுக்கு இடையே ஆற்றுப் படுகை அருகே நிலவியல் விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தபோது, குவியல் குவியலான கல்லாகிய முட்டைகள் மண்ணாலான கூடுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் புகைப்படங்களும் மாதிரிகளும் உறுதிப்படுத்துவதற்காக பல பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்ட்டன. கல்லாகிய முட்டைகள் பார்ப்பதற்கு டினோசோர் முட்டைகள் போல இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து அளவில் இருக்கின்ற இந்த முட்டைகள் சொரோபோட்ஸ் எனப்படும் கழுத்து நீண்ட தாவர உண்ணி டைனோசோர் வகையை சேர்ந்தவை என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.


பேராசிரியர் மு.ராம்குமார் தலைமையில் பேராசிரியர் கு.அன்பரசு, விரிவுரையாளர் இரா.சுரேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள் தி.சுகந்தா, கு.சதீஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து அரியலூருக்கு வடகிழக்கே ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


இது குறித்து ஆய்வுக் குழுத் தலைவர் பேராசிரியர் ராம்குமார், பெரியார் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:


அரியலூர் பகுதியில் சுமார் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசரின் முட்டைப் படிவங்கள், முட்டையிட்ட இடங்கள், எலும்புத் துண்டுகள், அவை வாழ்ந்த காலத்தில் இருந்த நன்னீர் ஏரி, ஆற்றுப் பாதை ஆகியவற்றை முதன் முறையாகக் கண்டுபிடித்துள்ளோம்.


டைனோசர் படிமங்கள் இவ்வளவு அதிகளவில் கிடைப்பது அகில இந்திய அளவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தக்காண பீடபூமியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாகவே இங்கிருந்த டைனோசர்கள் அழிந்தன என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. எரிமலைக் குழம்புகள் உருகி ஓடியதற்கான தடயங்களும் இங்குள்ளன என்றார்.


டைனசோர் இனம் ஏன் அழிந்தது என்பது பற்றி கூடுதல் விபரம் அறிய இக்கண்டுபிடிப்பு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மூலம்