உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம், 12 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(அவுஸ்திரேலிய வெள்ளம்; 08 பேர் பலி. இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதன், சனவரி 12, 2011

ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வரலாறு காணா பெரும் வெள்ளப்பெருக்கினால் அங்கு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


திங்கள் அன்று டூவூம்பாவில் வெள்ளம்
இப்ஸ்விச் நகரில்
பிறிஸ்பேன் நதி பெருக்கெடுக்கிறது
பிறிஸ்பேன் நகரில் மக்கள் வெளியேறுகின்றனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிறிஸ்பேன் நகரில் 20,000 வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் அன்னா பிளை தெரிவித்தார். நாளை அதிகாலை பிறிஸ்பேன் நதி பெருக்கெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எனவும் நகரத்தின் பெரும் பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


பிறிஸ்பேனுக்கு மேற்கே இப்ஸ்விச் நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும், பாலங்கள் உடைந்ததாலும் போக்குவரத்துக்கள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. இதனால் தோணிகள், படகுகள், மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் காயமடைந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். காணாமல் போனோரைத் தேடிக் கண்டு பிடிக்க அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.


லொக்கியர் பள்ளத்தாக்கு, வைவன்ஹோ அணைக்கட்டு ஆகியன கடந்த திங்களன்று நிரம்பிப் பெருக்கெடுத்ததால் பிறிஸ்பேன் நகரம் நாளை வியாழன் அன்று வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.


பிறிஸ்பேனில் இருந்து 130 கிமீ மேற்கேயுள்ள டூவூம்பா நகரமே திங்களன்று இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் பெரும் பாதிப்படைந்தது. தரை மட்டத்தில் இருந்து 8 மீட்டர் உயரம் வரை வெள்ளம் அங்கு பரவியது. இது ஒரு "உடனடி உள்ளூர் சுனாமி” என இதனை உள்ளூர் மக்கள் விவரித்தனர். வாகனங்கள் தீப்பெட்டிகள் போல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


குயின்ஸ்லாந்து வெள்ளத்தினால் பல பில்லியன் டொலர்கள் நட்டம் சேதம் ஏற்பட்டுள்ளதென்றும், 200,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது


மூலம்

விக்கியூடக நடுவம்
விக்கியூடக நடுவம்
குயின்ஸ்லாந்து வெள்ளம் தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .