தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்

விக்கிசெய்தி இலிருந்து
மேற்கு ஆஸ்திரேலியா

வியாழன், செப்டம்பர் 10, 2009, ஆஸ்திரேலியா:


தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் ஓர் இருபத்தைந்து ஆண்டு காலகட்டத்துக்கு 600 கோடி அமெரிக்க டாலர் பெறுமதி கொண்ட திரவ வடிவிலான இயற்கை எரிவாயுவை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் பற்றி ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.


மேற்கு ஆஸ்திரேலியாவின் கொர்கொன் பெட்ரோலிய கிணறுகளிலிருந்து 2014 ஆம் ஆண்டு இயற்கை எரிவாயு விநியோகம் ஆரம்பமாகும் காலகட்டத்திலிருந்து, அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் செவ்ரான் பெட்ரோலிய நிறுவனம் இந்த நாடுகளுக்கு எரிவாயுவை விநியோகிக்கும் என பிரதமர் கெவின் ரட் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


பரோ தீவு

சீனாவுக்கு எரிவாயு வழங்குவதற்காக 500 கோடி டாலர் பெறுமதியுள்ள ஒரு ஒப்பந்தத்திலும் ஆஸ்திரேலியா கடந்த மாதம் கையொப்பமிட்டிருந்தது. 250 கோடி டாலர் பெறுமதி கொண்ட ஒப்பந்தம் ஒன்றை இந்தியாவுடனும் அது செய்துகொண்டுள்ளது.


மேற்கு ஆஸ்திரேலியாவின் பரோ தீவில் அமைக்கப்படவிருக்கும் எரிவளிமக் கிணறுகளின் மூலம் 6,000 பேருக்கு வேலை வாய்ப்புத் தரமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனாலும் இந்த 50 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் திட்டத்துக்கு பல இயற்கை ஆர்வலைர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பரோ தீவில் பல அரிதான விலங்கினங்கள் வாழ்ந்து வருவதே இவர்களின் எதிர்ப்புக்குக் காரணம்.

மூலம்[தொகு]