உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியாவின் சிட்னி நகரை புழுதிப் புயல் மூடியது

விக்கிசெய்தி இலிருந்து
சிட்னியைத் தாக்கிய புழுதிப்புயல் வான்பகுதியைச் கடும் செம்மஞ்சள் நிறமாக்கியது

புதன், செப்டம்பர் 23, 2009, சிட்னி:


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களைத் திடீரெனத் தாக்கிய புழுதிப் புயல் சிட்னி, மற்றும் பிறிஸ்பேன் நகரங்களை பல மணி நேரம் மூடி ஆதன் வான் பரப்புகளை கடும் செம்மஞ்சள் நிறமாக்கியது.


இந்த திடீர் செம்புழுதியால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்படலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் வெளியில் வந்தவர்கள் பலரும் முகமூடிகளை அணிந்து நடமாடினர்.


உலகப் புகழ்பெற்ற சிட்னியின் சின்னங்களான ஒபேரா ஹவுசும், துறைமுகப் பாலமும் புழுதியால் மறைக்கப்பட்டுள்ளன. சிட்னி விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் எதிரில் வருவது தெரியாத வகையில் புழுதி அடர்த்தியாக இருந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.


செவ்வாய் கிரகம் போல சிட்னி நகரமே மாறிப் போயிருந்தது. இதை பலர் வெளியில் வந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். பலர் வியப்புக்குள்ளாகினர். பலருக்கோ பீதியாகி விட்டது.


புரோக்கன் ஹில் நகரிலிருந்து தொடங்கிய இந்த புழுதிப் புயல் கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் படிப்படியாக வீசி நகரங்களை செம்மையாக்கி விட்டது. புழுதிப் புயல் வீசியபோது, மணிக்கு 60 மைல் வேகத்தி்ல் பலத்த காற்றும் வீசியது. இந்த புழுதிப் புயல் காரணமாக 50 லட்சம் டன் தூசி சிட்னி உள்ளிட்ட பகுதிக்குள் வந்து சேர்ந்து விட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.


மேலும் விவசாய நிலங்களில் முக்கியமாக உள்ள மேல் மட்ட மண்ணையும் இந்த புழுதிப் புயல் அள்ளிப் போய் விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மணிக்கு 75 ஆயிரம் டன் அளவுக்கு அடர்த்தியான தூசி சிட்னி நகரை மூடியது. இந்தப் புயல் பின்னர் பசிபிக் கடலில் போய் முடிந்தது.


ஆஸ்திரேலியாவில் 70 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக இப்படியான ஒரு புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த புழுதிப் புயல் காரணமாக சிட்னி நகரில் காற்று மாசின் அளவு 4164 ஆக இருந்தது. வழக்கமாக 200க்கு மேல் போனாலே அது அபாயகரமானது. ஆனால் 4164 என்ற அளவில் காற்று மாசுபட்டுப் போனதால், ஆஸ்துமா உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படும் சுகாதாரத் துறையினர் எச்சரித்திருந்தனர்.


நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிற பகுதிகளில் கல்மழை பொழிந்ததாகத் தகவல் வந்துள்ளது. இதில் சில கற்கள் கிரிக்கெட் பந்து அளவுக்குப் பெரியதாக இருந்ததாகவும், கார்கள், வீடுகளின் சன்னல்கள் உடைந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படங்கள்

[தொகு]

மூலம்

[தொகு]