உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியாவில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான இந்தியருக்கு 1 மில். டாலர் இழப்பீடு

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(ஆத்திரேலியாவில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான இந்தியருக்கு 10 மில். டாலர் இழப்பீடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதன், திசம்பர் 22, 2010

2007 ஆம் ஆண்டில் கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்புத் தொடர்பில் தவறுதலாகக் குற்றம்சாட்டப்பட்டு ஆஸ்திரேலியாவில் கைதான இந்திய மருத்துவர் முகம்மது ஹனீப் பெரும் தொகையான பணத்தை ஆத்திரேலிய அரசிடம் இருந்து இழப்பீடாகப் பெற்று அந்நாட்டு அரசுடன் சமரசமாகப் போவதற்கு உடன்பாடு கண்டுள்ளார்.


இவ்வுடன்பாட்டின் படி, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக அவருக்கு வழங்கப்படும். ஆத்திரேலியாவின் முன்னைய ஹவார்ட் அரசின் குடிவரவுத்துறை அமைச்சருக்கு எதிரான அவரது அவதூறு வழக்கை அவர் திரும்பப் பெற்றுக் கொள்வார். அத்துடன் ஆத்திரேலிய அரசு அவரிடம் பகிரங்க மன்னிப்பையும் கேட்கும்.


பிறிஸ்பன் நகரில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மரு. ஹனீப் "இம்முடிவு எட்டப்பட்டது தனக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்திருக்கிறது" எனத் தெரிவித்தார். "2007 ஆம் ஆண்டில் தாம் தவறுதலாகக் கைது செய்யப்பட்டமை தனக்கும் தனது குடும்பத்துக்கும் பெரும் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது," என்றார்.


அடுத்த 12 மாதங்களில் தாம் மீண்டும் பிறிஸ்பேனுக்கு தனது மனைவி, மகளுடன் வந்து தனது மருத்துவப் பணியை ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.


பெங்களூரைச் சேர்ந்த முகம்மது ஹனீப் ஆத்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட்டில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். 2007 இல் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து, ஹனீப்பை ஆத்திரேலிய நடுவண் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கும், கிளாஸ்கோ சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டது. ஹனீப் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட கபீல் அகமது, சபீல் அகமது ஆகியோரின் ஒன்று விட்ட சகோதரர். ஆனாலும், ஹனீப்புக்கு எதிரான எந்த ஆதாரமும் ஆத்திரேலியாவுக்குக் கிடைக்கவில்லை. மேலும் அவர் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஹனீப் விடுவிக்கப்பட்டார்.


ஹனீப்புக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து அவரது வக்கீல்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனாலும், அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


மூலம்

[தொகு]