ஆத்திரேலியா நோக்கிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 200 பேரைக் காணவில்லை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 19, 2011

அடைக்கலம் தேடி, ஆத்திரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று, இந்தோனேசியாவின் கிழக்கே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


2 குழந்தைகள், 1 பெண் உட்பட 33 பேர் மீன்பிடித்துக் கொணடிருந்தவர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக, ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூழ்கியவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களை மீட்கும் பணியில் இரு உலங்குவானூர்திகளும், கடற்படைக் கப்பல் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


ஆப்கானித்தான், துருக்கி, ஈரான், சவூதி அரேபியாவை சேர்ந்தவர்களே ஆத்திரேலியாவில் குடியேற சட்டவிரோதமாகச் சென்றுள்ளனர். கிழக்கு ஜாவாவை அடுத்த கடல்பரப்பில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்தில் தப்பியவர்கள் மூன்று முதல் நான்கு மீட்டர் உயரமுள்ள அலைகள் இருந்த்தாகவும், வேகமாக காற்றடித்தாகவும் கூறுகின்றனர். ஜாவாவில் இருந்து 40 கடல்மைல் தூரத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்தப் படகில் 250 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படகு மூழ்கிய இடங்களில், சுறாமீன்கள் அதிகளவில் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புப் பணிக்கென ஆத்திரேலியாவைச் சேர்ந்த 300 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த இரு மாதங்களுக்குள் ஆத்திரேலியா நோக்கி வந்த இரண்டாவது கப்பல் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


மூலம்[தொகு]