உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானிஸ்தானில் சனாதிபதி தேர்தல் இடம்பெற்றது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 21, 2009


ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள் வியாழக்கிழமை இடம்பெற்றது. தலிபான்களின் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும்.


தலைநகர் காபூலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. புதன்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு சமீபமாகவுள்ள வங்கியொன்றை தாக்க முயன்ற போராளிகளுக்கும் துருப்புகளுக்குமிடையேயான மோதலில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


2006 இல் அமீட் அர்சாய்
2004 இல் அப்துல்லா அப்துல்லா

வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ள தலிபான்கள் மக்களை வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல வேண்டாமெனவும் இத் தேர்தலில் பங்குபற்ற வேண்டாமெனவும் எச்சரித்திருந்தனர்.


இத் தேர்தலில் ஜனாதிபதி அமீட் கார்சாய் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவாரென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் இதில் போட்டியிடும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாவிடமிருந்து கார்சாய் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இத் தேர்தலில் சுமார் 40 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத் தேர்தலில் 34 மாகாணங்களுக்கான 420 மாகாண சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள 8 மாகாணங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவில்லை.


இதேவேளை, இத் தேர்தலின் மூலம் தெரிவாகும் புதிய அரசாங்கம் ஆட்சியிலும் உதவி நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதென எச்சரித்துள்ள உதவி அமைப்பான ஒக்ஸ்பாம் பாரிய முதலீடுகளுக்கு மத்தியிலும் ஆப்கான் மக்களில் மூன்றிலொருவர் கடும் வலுமையையும் பட்டினியையும் எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தான் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயே முன்னிலையில் உள்ளதாகவும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பொன்றை எதிர்கொள்ள அவசியமற்ற வகையில் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று உள்ளதாகவும் அவரின் பிரசார தலைவர் டீன் மொஹமட் தெரிவித்தார். அதேசமயம் ஹமீட் கர்ஸாயின் பிரதான போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவும் தானே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக உரிமை கோரியுள்ளார்.


மேற்படி உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளிவர இரு வாரங்கள் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் நிறைவு பெற்று விட்டதாக ஆப்கான் தேர்தல் ஆணையகம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.


உத்தியோகபூர்வத் தேர்தல் முடிவுகளை எதிர்வரும் வாரம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையக அதிகாரியான ஸெக்ரியா பராக்ஸாய் கூறினார்.


மூலம்

[தொகு]