உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இசுரேல் தூதரகங்களை வெளியேற்றுமாறு முகம்மது கடாபி கோரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து
ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள்

புதன், செப்டம்பர் 2, 2009, திரிப்பொலி, லிபியா:


ஆப்பிரிக்க நாடுகளிடையே நிலவும் முரண்பாடுகள் இசுரேல் யூத அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த லிபிய ஜனாதிபதி முகம்மது கடாபி இஸ்ரேல் தூதரகத்தை ஆபிரிக்க நாடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். லிபியத் தலைநகர் திரிப்பொலியில் ஆபிரிக்க நாடுகளின் மாநாடு ஆரம்பமானது.


இரண்டு நாள் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய லிபிய ஜனாதிபதி முகம்மத் கடாபி ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத்தினார். பொதுவான நாணயம், வங்கி முறை, இராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் ஆபிரிக்க நாடுகளுக்கு அவசியம். இந்நாடுகளுக்கு எல்லைகள் தேவையில்லை. எல்லைகளை நிர்ணயித்து எம்மை வேறாக்கியது சர்வதேசம், இந்த சதி வலையில் தொடர்ந்தும் நாம் சிக்க முடியாதென்றும் லிபிய ஜனாதிபதி உரையாற்றினார்.


சூடான், சாட் ஆகிய நாடுகளின் எல்லை முரண்பாடுகள் சூடானின் தார்புர் பிரச்சினை என்பவற்றைத் தீர்ப்பதற்கு ஆபிரிக்க ஒன்றியம் பங்காற்ற வேண்டும். ஐநாவின் தேவையில்லாத தலையீட்டை ஆபிரிக்க நாடுகளிலிருந்து நீக்குதல் உட்பட வெளிநாடுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆபிரிக்க நாடுகளை விடுதலையளிப்பது பற்றியும் இம்மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.


சுமார் 53 நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற போது இம்மாநாட்டில் முப்பது நாடுகளின் தலைவர்களே கலந்து கொண்டனர். சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசீரும் இம்மாநாட்டில் பங்கேற்றார். இவர் மீது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் எழுந்த நெருக்கடியான சூழலை ஆப்பிரிக்க நாடுகள் ஒற்றுமையுடன் எதிர்நோக்கின. தார்புர் பிரச்சினைக்கான தீர்வு சூடான் அரசாங்கத்தின் கைகளில் உள்ளது என்பதை மாநாடு அழுத்திக் கூறியது.


லிபியாவின் நாற்பதாவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இடம் பெறும் வேளையில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது. திங்கட்கிழமை ஆரம்பமான ஆபிரிக்க நாடுகள் மாநாடு நேற்று செவ்வாய்க் கிழமை முடிவடைந்தது. லொக்கர்பி விமானக் குண்டு வெடிப்பின் குற்றவாளியான லிபிய நபர் விடுதலையானமையால் மேற்குலக நாடுகளுடனான உறவை விஸ்தரிக்க லிபியா எண்ணியுள்ளது. இசுரேலை நேரடியாகத் தாக்கிப் பேசியமையால் மேற்குலக நாடுகள் சில அதிருப்தி தெரிவித்துள்ளன.

மூலம்[தொகு]