ஆஸ்திரேலியச் சுரங்கக் கம்பனி பணிப்பாளர்கள் பயணம் செய்த விமானம் கமரூனில் காணாமல் போனது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 21, 2010

மேற்கு ஆப்பிரிக்காவில் கமரூனில் இருந்து கொங்கோ குடியரசுக்கு விமானிகள் உட்பட 11 பேரை ஏற்றிச் சென்ற தனியார் விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போயுள்ளது.


இவ்விமானத்தில் "சண்டான்ஸ் ரிசோர்சஸ்" என்ற ஆஸ்திரேலியச் சுரங்கக் கம்பனியின் அன்னைத்து ஆறு பணிப்பாளர்களும் பயணம் செய்துள்ளனர். இவர்களுடன், இரண்டு பிரித்தானியர், இரண்டு பிரெஞ்சு மற்றும் ஒரு அமெரிக்கரும் பயணித்ததாக கமரூன் அரசு அறிவித்துள்ளது.


ஆஸ்திரேலியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கென் டால்பொட் என்பவரும் காணாமல் போனோரில் ஒருவர் ஆவார்.


கொங்கோவில் உள்ள யாங்கடோ என்னும் இடத்தில் இரும்புத் தாதுப்பொருள் திட்டம் ஒன்றுக்கு இவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.


கமரூனின் தலைநகர் யோவுண்டேயில் இருந்து புறப்பட்ட விமானம் ஒரு மணி நேரத்தில் அதன் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கமரூனின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


விமானம் அடர்ந்த காட்டில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. வானில் பலத்த வெடிச் சத்தத்தைக் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தாக "தி அட்வர்ட்டைசர்" பத்திரிகை தெரிவித்துள்ளது.


விமானத்தைத் தேடும் பணியில் ஆஸ்திரேலியா உதவவிருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார். "இவ்விபத்து குறித்து நாம் எல்லோரும் கவலை கொண்டுள்ளோர்," என அவர் தெரிவித்தார்.

மூலம்[தொகு]