உள்ளடக்கத்துக்குச் செல்

இசுரேலுக்காக உளவு பார்த்த அமெரிக்க விஞ்ஞானி கைது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 22, 2009


சந்திரனை ஆராய இந்தியா அனுப்பிய விண்வெளிக் கலமான சந்திரயானில் சென்ற அமெரிக்க உபகரணங்களைக் கொண்டு ஆய்வு நடத்திய அமெரிக்க விஞ்ஞானி ஸ்டுவர்ட் டேவிட் நோசட்டே இசுரேலுக்கு உளவு பார்த்ததாக திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


அமெரிக்காவின் நாசாவில் (விண்வெளி ஆராய்ச்சி கழகம்) விஞ்ஞானியாக பணியாற்றிய 52 வயதான ஸ்டுவர்ட் நொசட்டே சந்திரனின் தென் துருவப் பிரதேசத்தில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தார். அங்கு பணியாற்றிய பிறகு அவர் ஓய்வுபெற்றார். அதற்கு முன்னதாக அவர் எரிசக்தி துறையில் பணிபுரிந்தார்.


முன்னதாக புஷ் ஜனாதிபதியாக இருந்த போது 1989 மற்றும் 1990ம் ஆண்டுகள் வெள்ளைமாளிகையில் புஷ் தலைமையில் இயங்கிய தேசிய விண்வெளி கவுன்சிலில் பணியாற்றினார்.


கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு ஒரு தொலைபேசி வந்தது. அதில் பேசியவர் தான் இஸ்ரேல் உளவுத் துறை அதிகாரி என்று கூறினார். ஆனால் உண்மையில் அவர் அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆவார்.


நொசட்டே மீது எழுந்த சந்தேகத்தை வெளிப்படுத்திக் கொள்வதற்காக அவர் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி போல நடித்தார். இதை அறியாமல் நொசெட்டே, அவரை இஸ்ரேலிய உளவு அதிகாரி என்றே நம்பினார்.


அவரை சந்தித்து பேசினார். தான் பல உயர் பதவிகளில் இருந்ததால், தனக்கு எல்லா ரகசியங்களையும் அறிந்து கொள்ளக் கூடிய சக்தி உண்டு என்று அவர் கூறினார். செய்மதி தொழில் நுட்பங்கள் பற்றிய ரகசியங்களை பணத்துக்கு விற்க அவர் முன்வந்தார்.


இதைத் தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் நொசட்டே பொலிஸ் அதிகாரியிடம் $11,000 அமெரிக்க டாலர்களைபெற்றுக் கொண்டு பல ரகசியங்களை விற்றார். அவர் அணு ஆயுதங்கள், இராணுவ செய்மதிகள் ஆகியவை குறித்த ரகசியங்களையும் விற்க முன்வந்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு அதிகப்பட்சம் ஆயுள்தண்டனை கிடைக்கும்.


இவரது கைது மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுருத்தலும் ஏற்படாது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இது பற்றி பிபிசியிடம் பேசிய, இஸ்ரோவின் செய்தித் தொடர்பாளர் சதிஷ், ஏற்கனவே பல பாதுகாப்பு நடைமுறைகள் இஸ்ரோவில் அமலில் இருப்பதாகவும் ரகசிய விடயங்கள் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இவருக்கு கிடைக்க வாய்பில்லை என்றும் தெரிவித்தார்.


நோசட் மேற்கொண்ட ஆய்வு குறித்த முழு விபரங்கள் இஸ்ரோவுக்குத் தெரியும் என்றும், ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளது சந்திரயான் தொடர்பான திட்டங்களுக்காக அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.

மூலம்