இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள் பாதிப்படையலாம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 13, 2009, இந்தியா:


இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் நிலத்தடி நீரின் மட்டம் நிலைக்க முடியாதளவுக்கு குறைந்து வருகின்றமை பல மில்லியன் மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.


நிலத்தடி நீர் என்பது மழை நீரால் நிலத்திற்குள் ஊடுருவும் நீரையும் ஏனைய மூலங்களிலிருந்து நிலத்துக்கடியில் சுரக்கும் நீரையும் குறிக்கின்றது. இந்த ஆய்வின்படி, வடக்கு இந்தியாவில் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி தண்ணீரின் மட்டம் நான்கு சென்ட்டி மீட்டர் அளவால் குறைந்து வருகின்றது.


நேச்சர் (Nature) ஆய்விதழில் கிறேஸ் (Gravity Recovery And Climate Experiment) மிசன் இது குறித்து தனது ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. கிரேஸ் மிசன் தனது இரண்டு விண் செய்மதிகளினூடாக அறிந்த தகவல்களை அடிப்படையாக வைத்ஹ்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.


ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட நிலத்தடி நீரின் இழப்பு இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தின் நீர்க்கொள்ளவைப் போல இரண்டு மடங்கு அதிகமானது. மனிதனின் நடவடிக்கைகள், குறிப்பாக விளைநிலங்களுக்கான நீர்ப்பாசன வழிமுறைகளே இதற்கான முக்கிய காரணியாகவுள்ளது.


இந்திய அரசாங்கம் நிலத்தடி நீரின் இழப்பு பிரச்சனை குறித்து கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால் இந்த இழப்பின் அளவு அவர்கள் ஏற்கனவே கணித்ததைவிட அதிகமானது என்றே இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.


ஆறுகளிலும் குளங்களிலும் மழைவீழ்ச்சிக்கு ஏற்றாப்போல் நீரின் மட்டம் கூடிக்குறைவது போல் நிலத்தடி நீரின் அளவில் அது தாக்கம் செலுத்துவது இல்லை என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விடயம். நிலத்தடி தண்ணீர் நிலத்தில் படிந்து நிலைகொள்ள பல ஆண்டுகள் தேவை என்பதே சிக்கலுக்குரிய உண்மை என்றும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

மூலம்[தொகு]