இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரத்தை அறிமுகப்படுத்த அனுமதி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 14, 2009


இந்தியாவில் முதல்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுத் தாவரம் ஒன்றை அறிமுகப்படுத்த மரபணுத் தாவர ஒழுங்கு சபை ஒப்புதல் அளித்துள்ளது.


புதிய வகை கத்தரிக்காய் ஒன்றை இந்தியாவின் மிகப் பெரிய தாவர ஆராய்ச்சி நிறுவனமான மராட்டியத்தில் உள்ள மாகிகோ உருவாக்கியுள்ளது. பூச்சிகளால் அதிகம் பாதிப்பு அடையாமல் இருக்கின்ற எதிர்ப்பு சக்தி இந்த புதிய வகை கத்தரிக்காயில் உள்ளது.


மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளை எதிர்க்கும் குழுக்கள், தற்போது அனுமதி வழங்கப்பட்டிருப்பதை எதிர்க்கின்றன. இத்தகைய காய்கறியை உண்ணுவதால் ஏற்படக்கூடிய மோசமான உடல் நலப் பிரச்சினைகளுக்கு போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த வகை கத்தரிக்காயை உற்பத்தி செய்வது சுற்றுச் சூழல் பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும், இந்த கத்தரிக்காய்களை சாப்பிட்டால் காலப் போக்கில் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றும் சில அறிவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


மராட்டியத்தில் மரபணு மாற்றியமைத்த பருத்தி விதைகளை பயன்படுத்தியதால் முதலில் விளைச்சல் அதிகமாகி சில ஆண்டுகளுக்கு பின் மிகவும் குறைந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெரும் பணமுதலீட்டை இழந்து ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. எனவே, மரபணு மாற்றியமைத்த கத்தரிக்காய்களை வியாபார நோக்குடன் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளும், கிரீன் பீஸ் முதலிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.


ஆனாலும் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலும் இந்தத் தாவரத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மரபணு மாற்றியமைத்த கத்திரிக்காய்களை உற்பத்தி செய்ய அனுமதி பெற்றிருக்கும் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த அனுமதியின் மூலம் உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றியமைத்த கத்தரிக்காய்களை உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மரபணு கத்தரிக்காயை உற்பத்தி செய்யும்போது 60 சதவீதம் வரை பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்துவது குறைகிறது. மேலும் இது பாதுகாப்பானது என்றார்.


இந்தியாவில் ஏற்கனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திச் செடி வணிக ரீதியில் பயிராகிறது.

மூலம்