இந்தியா ஒரே தடவையில் ஏழு செயற்கைக்கோள்களை ஏவியது
புதன், செப்டம்பர் 23, 2009, இந்தியா:
மீன் வளம் உள்பட கடலின் பல்வேறு விவரங்களைக் கண்டறிவதற்கு உதவும் ஓசன்சாட்-2 செயற்கைக் கோள் மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் 6 செயற்கைக்கோள்களுடன் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி-சி14 ராக்கெட் ஆகியன ஒரே நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டன.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளித் தளத்திலிருந்து, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அந்த செயற்கைக் கோள்கள் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டன.
விண்ணில் பாய்ந்த 20 நிமிடங்களில் ஏழு செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது.
இது, இந்தியாவின் 46 ஆண்டுகால விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஓசன்சாட்-1 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. இன்று செலுத்தப்பட்ட ஓசன்சாட்-2 செயற்கைக் கோள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் விஞ்ஞானிகளுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
ஓசன்சாட்-2 செயற்கைக்கோள் மூலம் இந்தியாவின் கடலோரப் பகுதிகள் கண்காணிக்கப்படும். இதன் மூலம் மீன்வளம் உள்ள பகுதிகள் குறித்தும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்
[தொகு]- "India launches seven satellites". பிபிசி, செப்டம்பர் 23, 2009
- "பிஎஸ்எல்வி-சி14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது". தினமணி, செப்டம்பர் 23, 2009