உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 15, 2009, ஜகார்த்தா, இந்தோனேசியா:


ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் செல்ல முயன்றபோது இந்தோனேசியாவின் கடற்படையால் ஜகார்தா அருகேயுள்ள மெரக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 260 இலங்கை தமிழ் அகதிகள் தாம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.


கப்பலில் உள்ள சிறு குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேடுத்துள்ளதாக பிபிசிக்கு தெரிவித்த கப்பலில் உள்ள அகதிகளில் ஒருவர், உடனடியாக ஏதாவது ஒரு நாடு தமக்கு அடைக்கலம் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.


கப்பலில் உள்ளவர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்தவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர்களில் சிலர் முகாம்களில் இருந்து தப்பிவந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


எங்களால் இலங்கையில் வாழவே முடியாது. அவுஸ்திரேலியா இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்பி விடுங்கள்.

—பிருந்தா, 9 வயதுச் சிறுமி

இதே வேளையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தவித்துக் கொண்டிருக்கும் பிருந்தா என்ற 9 வயது தமிழ்ச் சிறுமி "எங்களால் இலங்கையில் வாழவே முடியாது. அவுஸ்திரேலியா இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்பி விடுங்கள்" என உருக்கமுடன் கோரியுள்ளார். இதனை ஆஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.


சட்ட விரோத குடியேறிகள் இந்தோனேசியா வழியாக தமது நாட்டுக்கு வருவதை இந்தோனேசியா தடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் சில தினங்களுக்கு முன்பாகத்தான் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் சாதகமான முடிவு எதனையும் வெளியிடப்போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்