உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஐநா மனித உரிமைகள் பேரவை ஆதரவு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 28, 2014


ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மற்றும் போர்க்குற்றங்களை விசாரணைக்கு வழி செய்யும் தீர்மானம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியது.


அமெரிக்க, மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்தில் முதற்தடவையாகப் பன்னாட்டு விசாரணை குறிப்பிடப்பட்டுள்ளது.


26 ஆண்டுகால விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரை அடுத்து இலங்கை இராணுவம் 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டது. இரு தரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனாலும், போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 தமிழ் மக்கள் வரையில் பெரும்பாலும் அரசுப்படையினரின் எறிகணை வீச்சுக்களினால் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


நேற்றைய ஐநா தீர்மானம் மொத்தம் 47 உறுப்பினர்களில் 23 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாக்கித்தான், உருசியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசுவேலா, வியட்நாம், கியூபா உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, எத்தியோப்பியா, குவைத், இந்தோனேசியா, சப்பான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டன. இந்தியா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் அது ஒதுங்கிக் கொண்டது.


இந்த தீர்மானத்துக்கான வாக்களிப்பில் இருந்து இந்தியா விலகி இருந்தமை, அதற்காக அதன் தூதுவர் கூறிய காரணங்கள், மற்றும் போதுமான நிதி இல்லை என்பதை காரணம் காட்டி அந்த தீர்மானத்தை பின்போடவும், சர்வதேச விசாரணையை தடுக்கவும் பாக்கித்தான் கொண்டுவந்த எதிர்ப்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு வழங்கியமை ஆகியவை குறித்து இலங்கை தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.


இலங்கை இந்தத் தீர்மானத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளது. "இத்தீர்மானத்தை நாம் நிராகரிக்கிறோம்," என இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச செய்தியாளர்களிடம் கூறினார்.


மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில், ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கோருகிறது. இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றியும் தொடர்ந்து கண்காணித்து, மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்தை இந்தத் தீர்மானம் கோரியுள்ளது.


மூலம்[தொகு]