இலங்கையில் இரு தொகுதிகளில் மீள் வாக்கெடுப்பு இடம்பெற்றது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், ஏப்ரல் 20, 2010

இலங்கையில் ஏப்ரல் 8 ஆம் நாளில் இடம்பெற்ற நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல்களில் இரு தொகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு இன்று மீளவும் நடைபெற்றன.


மத்திய மாகாணத்தில் நாவலப்பிட்டி, மற்றும் கிழக்கு மாகாணத்தில் கும்புறுப்பிட்டி தேர்தல் தொகுதிகளில் இன்று இடம்பெற்ற மீள்வாக்குப்பதிவில் வன்முறைகள் ஏதும் இடம்பெறவில்லை எனத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.


அத்துடன், 60 வீதமான வாக்குப் பதிவு இத்தொகுதிகளில் இடம்பெற்றிருப்பதாக கஃபே அமைப்பின் இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.


அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் ஆளும் கூட்டணி ஏற்கனவே பெரும்பான்மை பலத்தைப் பெற்று விட்டபடியால், இன்றைய முடிவுகள் ஏதும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டா எனக் கருதப்படுகிறது.


ஆளும் கூட்டணி இதுவரை அறிவிக்கப்பட்ட 180 முடிவுகளில் 117 இருக்கைகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. மொத்தம் 225 இருக்கைகளுக்காக தேர்தல் இடம்பெறுகிறது. முழுமையான முடிவுகள் நாளைக் காலையில் அறிவிக்கப்படும் என அறியப்படுகிறது.


இரு வாரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த தேர்தல்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றிருந்ததாக சுதந்திரமான தேர்தல்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சுயேட்சைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என அவர்கள் முறைப்பட்டுள்ளனர்.


2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும்.

மூலம்[தொகு]