உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் உள்ள சுவீடன் தூதரகம் மூடப்படுகிறது

விக்கிசெய்தி இலிருந்து
சுவீடனின் கொடி

வெள்ளி, சூலை 24, 2009 சுவீடன்:

கொழும்பில் இயங்கிவருகின்ற சுவீடன் நாட்டின் தூதரகத்தை 2010 மார்ச் 31 உடன் மூடப்போவதாக சுவீடன் நாட்டு வெளிநாட்டு அமைச்சர் கார்ல் பில்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் வளர்ச்சிப் பணிகளுக்கு சுவீடன் செய்து வரும் உதவியை நிறுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இலங்கையுடனான இருதரப்பு அபிவிருத்தி உதவிகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் 2007 இல் செய்யப்பட்ட அபிவிருத்தி கூட்டுறவின் மதிப்பாய்வினை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதேவேளை கலினிங்கிராட், கன்ரன், லொஸ் ஏஞ்சலஸ், நியூ யோர்க் ஆகிய இடங்களிலுள்ள தமது பிரதிநிதிகள் அலுவலகங்களையும் மூடுவதற்கு சுவீடன் அரசு முடிவெடுத்துள்ளது. வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிதித்திட்டங்களை சமநிலைப்படுத்துவதற்காகவே இவ்வாறான முடிவினை சுவீடன் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.


புதுடில்லியிலுள்ள தூதரகத்தின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டுப்பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறக்கக் கூடியதாக இருப்பது, சுவீடன் மக்களுக்கும், கம்பனிகளுக்கும் தமது சேவையைக் கொடுக்கும் நோக்குடனாகும் எனக் கூறும் அந்த அறிக்கை செஞ்சென் கூட்டுறவு கட்டமைப்புக்கு அமைய விசா சேவைகள் நிர்வகிக்கப்படும் என்றும் தொடர்ந்து கூறுகிறது.


கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரெஞ்சு, மற்றும் பிரித்தானிய வெளிநாட்டமைச்சர்களுடன் இணைந்து இலங்கை வருவதற்கு விண்ணப்பித்திருந்த சுவீடனின் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட்டின் விசா விண்ணப்பம் இலங்கை அரசினால் நிராகரிக்கப்பட்டமையே சுவீடனின் இம்முடிவுக்கு முக்கிய காரணம் என வெளிநாட்டுத் தூதரக வட்டாரங்கள் கருதுகின்றன.

மூலம்[தொகு]