இலங்கையில் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என நவநீதம்பிள்ளை அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 13, 2010



கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையில் நடந்த ஈழப்போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்று கருதப்படக்கூடிய விடயங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை தேவை என்பதை தாம் தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம் பிள்ளை கூறியிருக்கிறார்.


நவநீதம் பிள்ளை

உலகின் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர்களுக்கான ஐந்தாவது மாநாடு அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் நடந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நவநீதம் பிள்ளை, இலங்கை விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்துளார்.


இலங்கையை பொறுத்தவரை அங்கு போர்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்று தான் சந்தேகிப்பதாகவும், நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என்றும் அது சுதந்திரமானதாகவும், நம்பகத்தன்மையுடனும் அமையவேண்டும் என்றும் தான் வலியுறுத்தி வருவதாகவும் நவநீதம் பிள்ளை கூறினார்.


இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அண்மையில் தம்மை ஜெனீவாவில் சந்தித்ததை நவநீதம்பிள்ளை உறுதிப்படுத்தினார்.


இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் தனது அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.


குறிப்பாக போரின் போதும், அதற்குப் பிறகுமான காலகட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமல்லாமல், தேர்தலுக்குப் பிறகு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று இலங்கை அமைச்சரிடம் தாம் கூறியதாகவும் அவர் கூறினார்.


ஐநாவின் மனித உரிமைகள் அவையில் இந்த விவகாரம் கையாளப்பட்ட விதம் குறித்து தமது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ள்ளார்.


முன்னாள் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணை மன்றத்தில் தாம் பல உண்மைகளை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார்.

மூலம்