இலங்கையில் மோதல் காலத்தில் போர்க்குற்றங்கள்: அமெரிக்கா அறிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 23, 2009


விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்துடைய இராணுவ நடவடிக்கையின் இறுதி மாதங்களில் நடந்த சம்பவங்கள் மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வெளியுறவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.


2009-ம் ஆண்டு தொடக்கத்தில் பொது மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பீரங்கித் தாக்குதல்களையும் அந்தப் போரில் சண்டையிடுவதற்கு சிறார்களை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்த அறிக்கை குறிப்பிட்டது.


அமெரிக்க நாடாளுமன்றம் விடுத்த வேண்டுகோளத் தொடர்ந்து அந்த அறிக்கையை அது தயாரித்தது.


"வடக்கில் உள்ள மக்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ளும் பணியைத் தொடங்குவதற்குத் தான் உறுதி பூண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. ஆனால் எந்த ஒரு சமரச முயற்சியிலும் பொறுப்பும் வெளிப்படையான போக்கும் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்", என அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் இயான் கெல்லி கூறினார்.


“இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து நாங்கள் அடைந்துள்ள கவலையை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.”


தான் அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ள கொடூரங்கள் போர்க் குற்றங்களாகுமா அல்லது அனைத்துலக மனித உரிமை மீறல்களாகுமா என்பதற்கு சட்டப்பூர்வ அடிப்படை ஏதும் இல்லை என்றும் வெளியுறவுத் துறை வலியுறுத்தியது.


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் “ஆதாரமற்றவை” என்று இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பொதுமக்களைக் காப்பாற்றுவதில் ஆயுதப் படையினர் மனசாட்சியுடன் செயல்பட்டனர் என்று கூறுகிறது.


போரில் ஈடுபட்ட இருதரப்பினரின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் என்று வருணிக்கப்படுகின்ற சம்பவங்களில் பெரும்பான்மையானவை மோதலற்ற பிரதேசம் என்று அரசாங்கத்தால் குறிக்கப்பட்டிருந்த இடங்களில் நடந்திருந்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இலங்கை அரசாங்கம் சண்டை நிகழ்ந்த நாட்டின் வட பகுதிகளை திறந்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அனைத்துலக அமைப்புக்கள் மேலும் முழுமையாக விசாரிப்பதற்கு அது உதவும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.


இலங்கையின் போர் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையானது, இது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான அவசியத்தை வலியுறுத்துவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


“சாத்தியமான போர்க் குற்றங்களை விசாரிக்க இலங்கை முழுமையாகத் தவறுமானால் சுயேச்சையான அனைத்துலக விசாரணையை நடத்துவது தான் ஒரே நம்பிக்கை”, என்று அந்த அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் அடம்ஸ் தெரிவித்தார்.


இலங்கையில் 1983 ம் ஆண்டு முழு அளவிலான உள்நாட்டுப் போர் தொடங்கியது முதல் 80 ஆயிரத்திலிருந்து100 ஆயிரம் பேர் வரை மடிந்திருக்கலாம் என்று ஐநா மதிப்பிட்டுள்ளது.

மூலம்