உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டம்பர் 7, 2009, கொழும்பு:


இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார்.


இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், தாம் தற்போது நடத்திவரும் ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரமாக்குவதுடன், மேலும் வேறு வழிகளிலும் போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப் போவதாகவும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.


இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் உள்ள பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரியிருந்தன.


இது தொடர்பாக பல சுற்றுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. ஆயினும் அவை இதுவரை தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.


அந்த நிலையில் இன்றும் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுக்கள் நடந்தன. ஆனால், தொழிலாளர்களுக்கு 360 ரூபா மாத்திரம் தினசரி சம்பளமாகத்தரவே முதலாளிமார் உடன்பட்டதால், அவர்களுடனான பேச்சுக்களை முறித்துக்கொண்டு தாம் வெளியேறியதாக, இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த வேலாயுதம் பிபிசியிடம் தெரிவித்தார்.


பேச்சுவார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன், முன்னாள் எம். பி. யோகராஜன் மற்றும் ஹரிஸ் சந்திரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சார்பாக கே. வேலாயுதம், மொஹிதீன் மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டி சார்பாக எஸ். இராமநாதன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

மூலம்[தொகு]