உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 17, 2011

ஈழப்போரின் இறுதிக் கட்ட நிகழ்வுகள் குறித்து அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை இராணுவம் பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பைத் தவிர்க்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும், மிகவும் முக்கியமாக இந்த இறுதிப் போரின் போது கணிசமான அளவு பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதை இந்த அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.


நாடாளுமன்ற அவை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா இந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்தார். சட்ட நிபுணரான சி. ஆர். டி சில்வா தலைமையிலான இக் குழுவினர் நாடு முழுவதும் பல அமர்வுகளை நடத்தி மக்களிடம் நேரடியாக விபரங்களைக் கேட்டறிந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களை வழங்கியிருந்தனர். ஆணைக்குழு தன் அறிக்கையை 388 பக்கங்களிலும் அதற்குரிய இணைப்புகளை 375 பக்கங்களிலும் உள்ளடக்கி இருபாகங்களை முன்வைத்துள்ளது. இந்த இரு பாகங்களையும், அவற்றின் சுருக்க அறிக்கையை மூன்று மொழிகளிலும் கொண்ட ஆவணங்களையும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் சமர்பித்தார்.


மகிந்த ராஜபக்ச 2010, மே 15ம் திகதி இந்த ஆணைக்குழுவை நியமித்தார். இக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு தமது அறிக்கையை கடந்த நவம்பர் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தனர்.


இராணுவம் பொதுமக்கள் இருந்த பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அதன் பிறகு காணமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.


இலங்கை அரசாங்கத்தின் இராணுவ யுக்திகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதில் பொதுமக்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பது அல்லது குறைப்பதை அந்த யுக்திகள் மையமாகக் கொண்டிருந்ததாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதற்காக இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் வேண்டுமென்றே மிகவும் தாமதப்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. எப்படியிருந்த போதிலும் சில தருணங்களில் பலப்பிரயோகம் அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும், அவை குறித்து மேலதிக புலன் விசாரணைகள் தேவை என்றும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது. இந்த விடயத்தில் இராணுவத்தின் பொதுவான நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக குற்றங்காணப்படும் இலங்கை இராணுவச் சிப்பாய்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பபட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.


சர்வதேச போர்ச் சட்டங்கள் குறித்து தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு தற்போதைய பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள், அரசாங்கங்களுக்கும், அரசாங்கம் அல்லாத போராட்டக் குழுக்களுக்கும் இடையிலான போர்களுக்கு உகந்த வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் அல்லாத குழுக்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்றாத காரணத்தால், அதற்கேற்றவாறு சர்வதேச சட்டங்களை மாற்றுவது தொடர்பில் சர்வதேச சமூகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.


அரசாங்கப் படைகள் நல்ல முன்னுதாரண அடிப்படையில் செயற்பட்ட போதிலும், அங்கு பெருமளவிலான காணாமல்போதல்கள், கடத்தப்படுதல் மற்றும் சட்ட விரோத தடுத்து வைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இவை குறித்து விசாரிக்க காணாமல்போனவர்களுக்கான ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்ப்பட்டு, சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.


வடமாகாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு செய்வதாக அடிக்கடி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.


தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தற்போதைய வன்செயல்கள், சந்தேகங்கள், தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதான உணர்வு ஆகியவற்றை நீக்க, மக்களை மையமாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் உள்ளுராட்சி சபைகள் பலப்படுத்தப்படுவதுடன், தற்போதைய மாகாண சபைகள் முறை திருத்தப்பட்டு, மத்தியில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. வெளியுலகுக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் அதிகாரங்கள் பரவலாக்கப்படுதலில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.


மூலம்

[தொகு]