உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோட்டில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்

விக்கிசெய்தி இலிருந்து
பேரா.மா.தமிழ்ப்பரிதி சிறப்புரை

திங்கள், திசம்பர் 16, 2013

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், தமிழ்த்துறையின் சார்பில் 13.12.2013, வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில், இக்கல்லூரியின் கலையரங்கத்தில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம் நடைபெற்றது.

பேரா. கமலக்கண்ணன் வரவேற்புரை

இந்நிகழ்வில், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தன் வரவேற்புரையில் தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணிகளின் தேவை குறித்தும் தமிழ் மாணவர்களும் பொதுமக்களும் வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் கூறினார். மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண. குறிஞ்சி இப்பயிலரங்கைத் தொடங்கி வைத்து தமிழரின் பண்பாட்டு ஆவண ஆக்கப்பணிகளில் தமிழ்கணினி, விக்கிப்பீடியாவின் தேவை, பங்கேற்பு குறித்து உரையாற்றினார்.

பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரை நிகழ்த்தி மாலை 5.30 மணிவரை செய்முறைப் பயிற்சி அளித்து பங்கேற்பாளர்களின் ஐயங்களுக்கு விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் இக்கல்லூரியின் மாணவர்கள் 70 பேரும் இணையவழிப்பதிவு செய்த 40 பேரும் பங்கேற்றனர். இப்பயிலரங்க ஒருங்கிணைப்புப் பணிகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் வை. கலைச்செல்வி, சி. அங்கயற்கண்ணி, சா. சிவமணி, அர. ஜோதிமணி, ந. மணிகண்டன், இரா. விசுவநாதன் ஆகியோர் மேற்கொண்டனர்.

காட்சிக்கூடம்

[தொகு]

மூலம்

[தொகு]
  1. தினகரன், கோவைப் பதிப்பு, நாள்: 14.12.2013.
  2. தி இந்து (தமிழ்), சேலம் பதிப்பு,பக்கம் 5, நாள்: 14.12.2013.
  3. தினமலர், ஈரோடு பதிப்பு, 15.12.2013.
  4. காலைக்கதிர், ஈரோடு பதிப்பு, 14.12.2013.