ஈழப்போர்க் குற்றம் தொடர்பான புதிய காணொளிகளை சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 2, 2010


பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி ஈழப்போரின் நான்காம் கட்ட இறுதியில் இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டும் கூடுதல் காணொளிக் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கு பயணம் செய்திருக்கும் நிலையில் இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளது.


இலங்கை இராணுவத்தினர் போன்று காணப்படும் சிலர் சூட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள சில காட்சிகள் காண்பிக்கப்பட்டன. நிர்வாணமான நிலையில் இறந்த பெண்களின் சடலங்களும் காண்பிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காண்பிப்பதற்கு மிகவும் கோரமான காட்சிகள் எனக் கூறி அவற்றைத் தணிக்கை செய்ததாகவும் அது கூறியிருந்தது.


இந்தப் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன்னதாக பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்பதை அந்த இராணுவத்தினரின் உரையாடல்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது என தொலைக்காட்சி கூறியுள்ளது.


கடந்த ஆண்டு இந்த சனல்4 வெளியிட்டிருந்த ஒளிநாடாவில் உள்ளடக்கியிருந்தவற்றின் அதிகரித்த தன்மையைக் கொண்டதாக இது இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீதி விசாரணைக்குப் புறம்பான விதத்தில் ஆட்கள் கொல்லப்பட்டதாக கடந்த ஆண்டு காண்பிக்கப்பட்டது.


சனல்4 செய்தி தொலைக்காட்சியின் ஒளிநாடாவானது உண்மைத்தன்மையற்றது என பிரித்தானியாவுக்கான இலங்கையில் உயர்தூதரகம் மறுத்துள்ளது.


இந்த வீடியோ காட்சிகள் மிகவும் கொடூரமானவையாக இருந்ததாகக் கூறுகிறார் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குனரான பிராட் அடம்ஸ், எந்தவொரு பொறுப்புள்ள அரசாங்கமும் இத்தகைய வீடியோக்கள் வெளியாகும் சூழ்நிலையில் அவை குறித்து புலனாய்வுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


குறைந்தது 7 பெண்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடுமென இக்காட்சிகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. சகதியான நிலத்தில் பெண்களின் இறந்த உடல்களை ஐந்து நிமிட ஒளிநாடாவில் சனல் 4 காண்பித்தது. இப்பெண்களில் ஒருவர் 27 வயது சோபா என்ற இசைப்பிரியாவும் ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளார் என தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் விடுதலைப் புலிகளின் சிறப்பு ஊடகவியலாளராகப் பணியாற்றியவர் என்றும் கூறப்படுகிறது.


அரசுத்தலைவர் ராஜபக்ச வந்திறங்கிய விமான நிலையத்திற்கு வெளிப்புறத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.


இதேவெளையில் மகிந்த ராஜபக்ச ஒக்சுபோர்ட் ஒன்றியத்தில் இன்று வியாழக்கிழமை ஆற்றவிருந்த உரை பாதுகாப்புக் காரணங்களுக்காக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்சுபோர்டு யூனியனில் உரையாற்றுவதற்காக அவர் லண்டனுக்கு திங்கட்கிழமை சென்றார்.


மனித உரிமை மீறலுக்காக அவரைக் கைது செய்ய வலியுறுத்தி பிரிட்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் சார்பாக லண்டனில் நாடாளுமன்றம் எதிரே புதன்கிழமை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.


ராஜபக்சவுக்கு உரிய பாதுகாப்பு இருக்குமா என்பது கேள்விக்குறியான நிலையில், அவருடைய உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக யூனியன் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் தலைவர்களில் பிரபலமானவர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் உரையாற்ற அழைப்பது ஒக்சுபோர்டு யூனியனில் வழக்கம். அந்த அடிப்படையில் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக யூனியன் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


மூலம்[தொகு]