உள்ளடக்கத்துக்குச் செல்

ஈழப்போர்: இராணுவத்தினரின் எறிகணைகளே தமிழரைக் கொன்றது - ஐநா

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 26, 2011

ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இலங்கை அரசின் எறிகணைத் தாக்குதல்களே காரணம் என ஐநா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐநா செயலர் பான் கிமூன்

நேற்று திங்கட்கிழமை மாலை நியூயார்க்கில் இந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் இடம்பெற்ற போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பான இந்த அறிக்கையில், பொதுமக்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது.


இரு தரப்பிலும் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.


ஐநா பொதுச்சபையின் அங்கத்துவ நாடுகள் இணக்கம் தெரிவித்தால் அல்லது இலங்கை அரசு இணங்கினாலோ மட்டுமே போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக பான் கீ மூன் நியமித்த மூவரடங்கிய நிபுணர் குழுவின் இந்த 216 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஐநா பகிரங்கமாக வெளியிட்டது.


இவ்வறிக்கையை வெளியிட வேண்டாமென இலங்கை அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி. எல். பீரிஸ் ஐநாவை முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.


ஐநாவின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில், மருத்துவமனைகள் மற்றும் ஐநா மையங்கள், பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்கள் மீது திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சுடப்பட்டார்கள் என்றும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை போரின் இறுதி கட்டத்தின்போது ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை பற்றி ஒரு விசாரணை நடத்தப்படுமென ஐ.நா.வின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார். இறுதிக் கட்டத்தில் ஐநா தனது மனிதாபிமான மற்றும் மக்களை பாதுகாக்கும் கடப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக ஐ.நா. வின் கடப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதா என்பதை ஆராய வேண்டும் என்ற சிபாரிசுக்கு சாதகமாக பதிலளிக்க செயலாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.


ஐநாவின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட அந்த குழுவின் அறிக்கையை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

மூலம்