உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி கனாரி தீவுகளில் அமைக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து
கனாரியின் பெரும் தொலைநோக்கி

வெள்ளி, சூலை 24, 2009 ஸ்பெயின்:


உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி ஸ்பெயினின் கனாரி தீவுகளில் மன்னர் முதலாம் ஹுவான் கார்லோசுவினால் திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காக்களில் இருந்து ஐநூறுக்கும் அதிகமான வானியலாளர்கள், அரசப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


கனாரியின் பெரும் தொலைநோக்கி என அழைக்கப்படும் இத்தொலைநோக்கி 10.4 மீட்டர் உயரமானது. கனாரி தீவுகளில் ஒன்றான லா பால்மா தீவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,267 மீட்டர் உயரத்தில் அணைந்துபோன எரிமலைக் குன்று ஒன்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள இப்பெரும் தொலைநோக்கியின் கட்டுமானப் பணிகள் முடிவதற்கு ஏழாண்டுகள் ஆயின. இதற்கான மொத்தச்செலவு €130 மில்லிய யூரோக்கள் ஆகும்.


இந்தத்திட்டத்தை ஸ்பெயின், மெக்சிக்கோ, மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல தொழில்நுட்பக்கழகங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுத்தின. 1987 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு கிட்டத்தட்ட 100 நிறுவனக்களின் ஆயிரத்திற்கும் அதிகமானோரால் இத்தொலைநோக்கி கட்டி முடிக்கப்பட்டது. புளோரிடா பல்கலைக்கழகம் மட்டும் இத்திட்டத்திற்கு 5 மில்லியன் டாலர்களை முதலிட்டது.


இத்தொலைநோக்கி விண்மீன்களின் தோற்றம், கருங்குழிகளின் இயல்புகள், பெரு வெடிப்புக் கோட்பாடு போன்றவற்றை ஆராயும்.

மூலம்[தொகு]