எகிப்தின் முன்னாள் தலைவர் ஒசுனி முபாரக்கிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 21, 2014

பொதுச் சொத்தை சூறையாடியமைக்காக எகிப்தின் முன்னாள் அரசுசுத்தலைவர் ஒசுனி முபாரக்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


அவரது இரண்டு மகன்கள் அலா, கமால் ஆகியோரும் குற்றவாளிகளாகக் காணப்பட்டு ஒவ்வொருவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் மூவருக்கும் 3 மில்லியன் டாலர்கள் தண்டமும், களவாடியதாகக் கூறப்படும் 17.6 மில்லியன் டாலர்களையும் திரும்பத் தரவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அரசுத்தலைவர் மாளிகையை புனரமைக்க ஒதுக்கப்பட்ட 17.6 மில்லியன் டாலர்களைத் தமது தனிப்பட்ட இருப்பிடங்களைப் புதுப்பிக்க முபாரக் பயன்படுத்தினார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


86 வயதாகும் ஒசுனி முபாரக் ஆட்சியில் இருக்கும் போது 2011 எழுச்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொல்லப் பணித்தமைக்காக அவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவர் 2012 ஆர்ப்பாட்டங்களின் போது முறைகேடாக நடந்தமைக்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் மேன்முறையீட்டை அடுத்து மீள விசாரணை நடைபெற்று வருகிறது.


கடந்த ஆண்டு ஆகத்தில் முபாரக் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


சனநாயக முறையில் அரசுத்தலைவராக தெரிவு செய்யப்பட முகம்மது மோர்சி கடந்த சூலை மாதத்தில் இராணுவத்தினரால் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து முபாரக் மீதான பொதுமக்களின் கவனம் குறைந்திருந்தது.


மூலம்[தொகு]