உள்ளடக்கத்துக்குச் செல்

எரித்திரியாவில் இராணுவத்தினர் சிலர் தகவற்துறை அமைச்சை சுற்றிவளைப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 22, 2013

எரித்திரியாவின் முன்னாள் இராணுவத்தினர் நேற்று திங்கட்கிழமை அந்நாட்டின் தகவல்துறை அமைச்சகத்தைச் சுற்றி வளைத்து, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.


கிளர்ச்சியாளர்களின் இந்தக் கோரிகையை அடுத்து அரசு ஊடகங்கள் அனைத்தும் சில மணி நேரம் இடை நிறுத்தப்பட்டிருந்தன. நேற்றைய நிகழ்வு குறித்து எரித்திரிய அரசிடம் இருந்து எவ்வித அறிக்கைகளும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. கிளர்ச்சியாளர்கள் அரசைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டிருக்கவில்லை எனவும், 1997 ஆம் ஆண்டு அரசியலமைப்பை மீள அமுல் படுத்த வேண்டும் எனவே கோரியுள்ளனர் எனக் கருதப்படுகிறது.


சுமார் 200 இராணுவத்தினர் இரண்டு இராணுவத் தாங்கிகளில் வந்திருந்த சுமார் 200 இராணுவத்தினர் அமைச்சைச் சுற்றி வளைத்ததாக வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளன.


1993 ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் அந்நாட்டை இசாயாசு எபெவெர்க்கி என்பவர் ஆட்சி செய்து வருகிறார். வட கொரியாவை அடுத்து உலகின் மிக இருண்ட நாடாகக் கருதப்படும் எரித்திரியாவில் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இங்கு ஒரு கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.


6 மில்லியன் மக்கள் வாழும் எரித்திரியாவில் 5,000 முதல் 10,000 வரையான அரசியல் கைதிகள் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் தலைவர் சென்ற ஆண்டு கூறியிருந்தார்.


சோமாலியாவில் கிளர்ச்சியில் ஈடுபடும் அல்-சபாப் தீவிரவாதிகளுக்கு உதவுவதாககுற்றம் சாட்டி 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை எரித்திரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.


மூலம்

[தொகு]