ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 7, 2009, பாகிஸ்தான்:


பாகிஸ்தானின் வச்சிரிஸ்தான் மலைப் பகுதியில் புதன்கிழமை அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், தெஹ்ரீக் இ-தலிபான் என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பைதுல்லா மசூதும், அவருடைய இரண்டாவது மனைவியும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளாது. இந்தத் தாக்குதலில் பைதுல்லா கொல்லப்பட்டதற்கான தடயங்களைச் சேகரிக்கும் பணியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில், மலைகளால் சூழப்பட்ட மாகாணம் வச்சிரிஸ்தான். இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பழங்குடியின இளைஞர்களுக்கு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்குப் பயிற்சி அளித்து, தனது தலைமையில் தெஹ்ரீக் இ-தலிபான் இயக்கத்தை தொடங்கினார் பைதுல்லா. பாகிஸ்தானில் அல்-கைதா அமைப்பின் செயல்பாடுகளுக்கு வழிவகை செய்து கொடுத்தவர்களில் பைதுல்லா முக்கியமானவர்.


35 வயதான பைதுல்லாவைப் பிடிக்க உதவுபவருக்கு ரூ.25 கோடி வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதேபோல, பைதுல்லாவைப் பிடித்துக் கொடுத்தால் ரூ.3 கோடி வெகுமதி அளிக்கப்படும் என பாகிஸ்தான் அரசும் அறிவித்திருந்தது.


இந்த நிலையில், தெற்கு வச்சிரிஸ்தான் பகுதியில் உள்ள தனது மாமனார் மாலிக் இக்ராமுதீன் வீட்டில் பைதுல்லா பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தையடுத்து, கடந்த புதன்கிழமை அதிகாலை அந்த வீட்டின் மீது அமெரிக்கப் படையினர் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தினர்.


இதில் பைதுல்லா, அவரது இரண்டாவது மனைவி உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பைதுல்லா கொல்லப்பட்டது தொடர்பான செய்தியை, அமெரிக்க அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏபிசி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.


பைதுல்லா கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும், ஆனால், இதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியதாக வேறு சில தொலைக்காட்சிகள் செய்திகளை ஒளிபரப்பின. ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி மசூது கொல்லப்பட்டதை உறுதி செய்தார்.


பைதுல்லா கொல்லப்பட்டது உறுதி செய்யப்படவில்லை என்றும், உண்மை நிலையை உறுதிப்படுத்த ராணுவம் புலனாய்வு செய்து வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் அக்தர் அப்பாஸ் தெரிவித்தார்.


தெஹ்ரீக் இ- தலிபான் இயக்கத்தின் துணைத் தளபதியான ஹக்கிமுல்லா மசூத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும், பைதுல்லாவும், அவருடைய மனைவியும் நலமுடன் உள்ளதாக முதலில் தெரிவித்தனர். ஆனால், இந்த ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த பைதுல்லாவின் மனைவி பின்னர் இறந்துவிட்டதாக தெஹ்ரீக் இ-தலிபான் இயக்கம் வியாழக்கிழமை அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது.


இதற்கு முன்னர் நடந்த பல தாக்குதல்களில் பைதுல்லா உயிர் தப்பியுள்ளார். கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் பைதுல்லா கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது. இதையடுத்து, பைதுல்லாவே செய்தியாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தான் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், தற்போதைய ஏவுகணைத் தாக்குதலில் பைதுல்லா கொல்லப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வெளியாகி பல மணி நேரமாகியும், கடந்த முறையைப் போல பைதுல்லா செய்தியாளர்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. எனவே, அவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் நம்புகின்றனர்.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை உள்பட அந்த நாட்டில் நிகழ்ந்த பல்வேறு தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு பைதுல்லாவின் இயக்கமே காரணம் என்று கூறப்படுகிறது.

மூலம்[தொகு]