உள்ளடக்கத்துக்குச் செல்

ஐநூறு இலங்கை அகதிகளுடன் எம்வி சன் சீ கப்பல் கனடாவை அண்மித்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 12, 2010


இலங்கைத் தமிழ் அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 500 பேருடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் புறப்பட்ட தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவின் பசிபிக் கரையோரத்தை அடைந்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


எம்வி சன் சீ என்ற இந்தக் கப்பல் கனடாவின் போர்க்கப்பல் ஒன்றினால் இனங்காணப்பட்டுள்ளது. கனடாவின் பிரித்தானியக் கொலம்பியா துறைமுகத்தை நோக்கி இன்று அல்லது நாளை வெள்ளிக்கிழமை இது கொண்டு செல்லப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.


இக்கப்பலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளது.


கரையில் இருந்து 370 கிமீ வட்டத்தில் உள்ள கனடாவின் “பொருளாதார வலயத்தினுள்’ இக்கப்பல் சென்றடைந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது.


முன்னதாக இக்கப்பலில் 200 பேர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு 500 பேர் வரையில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைத் தங்க வைப்பதற்கு வான்கூவரின் கிழக்கே மேப்பிள் ரிட்ஜ் என்ற இடத்தில் தடுப்பு முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் உள்ள சிறுவர்களை சிறுவர் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சு பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.


இதேவேளை கப்பலில் வருவோர் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க, விசாரணை செய்யப்படுவார்கள் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மூலம்

[தொகு]