ஐந்து சட்டசபை இடைத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 21, 2009, சென்னை:


தமிழ்நாடு சட்டசபைக்காக ஐந்து தொகுதிகளில் கடந்த 18ம் தேதி நடந்த இடைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் அமோகமாக வென்றுள்ளதன் மூலம் திமுக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது. திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது.


இடைத்தேர்தலுக்கு முன் சட்டசபையில் திமுகவுக்கு 96 உறுப்பினர்கள் இருந்தனர். கம்பம், பர்கூர், இளையான்குடி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது.


காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூரில் வென்றதன் மூலம் காங்கிரஸ் பலம் 36 ஆக அதிகரித்துள்ளது.


61 எம்எல்ஏக்களைக் கொண்டிருந்த அதிமுகவின் பலம் 58 ஆகக் குறைந்துள்ளது. மதிமுகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இரண்டு குறைந்து 3 ஆகிவிட்டது. திமுக கூட்டணியின் பலம் 131 என்பதிலிருந்து 136 ஆக உயர்ந்துள்ளது.


தனியாகப் போட்டியிட்ட தேமுதிக சென்ற 2006ல் நடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது ஐந்து தொகுதிகளிலும் அதிக வாக்குகள் கிடைத்து இருக்கிறது. இடைத் தேர்தலை அதிமுக, பாமக, மதிமுக கட்சிகள் புறக்கணித்துவிட்டன.


2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் திமுக- காங்கிரஸ் கூட்டணியும் தேமுதிகவும் {வைகுண்டத்தில் இப்போது முறையே 15,639 வாக்குகளும் 19,302 வாக்குகளும் அதிகமாகப் பெற்றுள்ளன. பர்கூரில் இந்த அதிகரிப்பு முறையே 30,228 வாக்குகள் மற்றும் 21,131 வாக்குகள். கம்பத்தில் திமுகவுக்கு 32,712 வாக்குகள் அதிகம். தேமுதிகவுக்கு 11,782 வாககுகள் அதிகம். தொண்டாமுத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் 1,246 வாக்குகள் குறைவாகப் பெற்று இருக்கிறார். அதேவேளையில் தேமுதிக 2,962 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. இளையான்குடியில் திமுகவுக்கு 12,000 வாக்குகள் அதிகம் கிடைத்தது. தேமுதிகவுக்கு 19,628 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது.


கம்யூனிஸ்டுகள், பாஜக இரண்டும் ஐந்து தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்துவிட்டன.

மூலம்[தொகு]