ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம்
ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம்
[தொகு]திருக்காட்டுப்பள்ளி சாலையில் தஞ்சாவூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் தெரிவித்தது: இப்பகுதியில் உள்ள ஊர்கள் அனைத்துமே பல்லவர், முத்தரையர், சோழர், நாயக்கர், மராத்தியர் எழுப்பிய, மறுநிர்மானித்த கோயில்களே. இங்கு மறுநிர்மானிக்கப்பட்டு வரும் கோயிலில் கள ஆய்வு மேற்கொண்டபோது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால சிவலிங்கம், அம்மன் சிலைகளைக் காணமுடிந்தது. சோழர்கள், நிர்வாக வசதிக்காக நாடு, வளநாடு, கூற்றம், ஊர் என பல பகுதிகளாகப் பிரித்திருந்தனர். ஆற்காட்டுக்கூற்றம் - ஆயிரத்தளி, ஓடவெளி (ஒன்பத்துவேலி), பெருமங்கலம், பிரம்பில், சந்திரலேகை (செந்தலை), பேராற்காடு (ஆற்காடு) போன்ற ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் ஒன்பத்துவேலி ஓடவெளி என்று அழைக்கப்பட்டது என்பது தெரியவருகிறது.
திருக்கோவிலூர் கல்வெட்டில்
[தொகு]இவ்வூர் சோழர்க்குரிய பழைய ஊர்களில் ஒன்றாகும். திருக்கோவிலூர் கல்வெட்டில் “அன்பதுவேலியின் அடைகுநர் காக்கும் ஒன்பதுவேலி உடைய உரவோன்” என சோழன் புகழப்படுகின்றான். தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 3-ல் மதுரை கொண்ட கோவிராச கேசரிவர்மனின் ஏழாவது ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “சோழநாடு ஆற்காட்டுக் கூற்றம் ஒன்பத்துவேலியைச் சார்ந்த இந்திரன் பழநாட்டடிகள் அவரது தம்பி அண்ணாமலை ஆகிய இருவரும் புலியூர் கூற்றத்து வெளிச்சேரி (வேளச்சேரி) திருத்தாண்டீஸ்வரம் மகாதேவர் கோயிலுக்கு” நிலத்தை தானமாக அளித்த செய்தி காணப்படுகிறது.
வன்மீகநாதர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடை
[தொகு]ஒன்பத்துவேலியில் உள்ள வன்மீகநாதர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையைக் குறிக்கும் நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள மராத்தி மொழி செப்பேடு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ளது. இச்செப்பேட்டின் நகலாக ஓலையில் எழுதப்பட்ட மராத்தி மொழி ஓலையும் இதன் மொழிபெயர்ப்பாக தமிழில் எழுதப்பட்ட ஓலையும் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் உள்ளது. இவை ஐரோப்பிய அறிஞர் லெப்டினென்ட் கர்னல் காலின் மெக்கன்சியால் தொகுக்கப்பட்டது. 1983-ல் இந்த ஓலைப் பட்டயம் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பெற்றது. இச்செப்பேடு (கி.பி.1763), மராத்திய மன்னர் பிரதாப சிம்மன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதில் வடக்கே காவிரி, மேற்கே திருக்காட்டுப்பள்ளி, தெற்கே வெண்ணாறு, கிழக்கே தஞ்சாவூர் இந்த எல்லைகளைப் பெற்று அரிகரபுரமான ஒன்பத்துவேலி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்செப்பேட்டில் ஒன்பத்துவேலியில் உள்ள அக்கிரகாரத்தின் ஈசான மூலையில் (வடகிழக்கில்) சோம கமலாம்பாளுடன் வன்மீகநாத சுவாமி கோயிலின் மாலை நேர பூஜைக்காக திருக்காட்டுப்பள்ளி கில்லேதார் பீமராயர் பிரதாமசிம்மனின் உத்தரவுப்படி புன்செய்யாக இருந்து நன்செய்யாக மாற்றிய நிலத்தில் 14 அடி கோலால் அளந்து கால் வேலியைக் கொடையாக அளித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்புமிக்க ஒன்பத்துவேலியில் 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமும் நின்ற கோலத்தில் அம்மன் சிலையும் காணப்படுகின்றன.
இச்சிவலிங்க பானத்தின் மீது காணப்படும் பிரம்ம ரேகை பிற சிவலிங்கங்களிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறது. மேலும் நாயக்கர் காலத்தைச் சார்ந்த ஆலமர்ச்செல்வன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் போன்ற சிற்பங்களும் காணப்படுவதாக கூறினார்.[1]