உள்ளடக்கத்துக்குச் செல்

கப்பல் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் அறுவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 25, 2014

2007 ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்படையின் ‘சயுர’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் மீது தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆறு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.


சயுர என்ற கப்பல் மீது இலங்கையின் மேற்குக் கரையில் நீர்கொழும்பில் வைத்து 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது. இத்தாக்குதலுடன் தொடர்புடையதாக ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


சயுர கப்பலைத் தாக்கியமை, கடற்படையினரை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுக்கள் இந்திரதாஸ் வசீகரன், மரியதாஸ் எஞ்சலோ, பீட்டர் பியோமேசன், ஜெயசிங்கம் ஜெயமோகன், சிரில் ஜூன் கிரிசாந்த, குமார் அந்தனி ஆகிய அறுவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்வதாக சந்தேக நபர்கள் அறுவரும் ஒப்புக் கொண்டனர்.


குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து தலா இரண்டாண்டு காலம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் லலிதா ஜயசூரிய இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.


மூலம்[தொகு]