கராச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் மீது தாலிபான்கள் தாக்குதல், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 9, 2014

பாகித்தானின் மிகப் பெரிய பன்னாட்டு வானூர்தி நிலையம் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலைத் தாமே நிகழ்த்தியதாக பாகித்தானியத் தாலிபான்கள் கூறியுள்ளனர். இத்தாக்குதலில் 10 போராளிகள் உட்பட குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 14 பேர் காயமடைந்தனர்.


கராச்சியில் அமைந்துள்ள ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பிரமுகர்கள் புறப்படும் இடத்திலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இத்தாக்குதல் நடத்தப்பட்டது.


விமான நிலையம் தற்போது தமது கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இராணுவம் அறிவித்து சில மணி நேரத்தில் இன்று திங்கட்கிழமை மீண்டும் அங்கு சண்டை மூண்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.


"கிராமங்கள் மீது இராணுவம் குண்டுத்தாக்குதல் நடத்தி அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கிறது. இவற்றுக்கு நாம் பதிலடி கொடுப்போம் என்பதை நாம் இத்தாக்குதல் மூலம் அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்," என தாலிபான்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


தாக்குதலில் இறந்தவரக்ள் அனைவரும் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலை அடுத்து அனைத்து வானூர்திகளும் வேறு இடங்களுக்குத் திருப்பப்பட்டன.


பாக்கித்தான் பிரதமர் நவாஸ் செரீப் முன்னெடுத்து வரும் தாலிபான்களுடனான அமைதிப் பேச்சுக்களுக்கு இத்தாக்குதல் தடங்கலை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


10 பேரைக் கொண்ட தாலிபான்களின் அணி இரண்டு பிரிவுகளாக விமான நிலையப் பாதுகாப்பு வீரர்களைப் போன்ற சீருடைகளில் பாதுகாப்புக் காவலாளிகளின் தடுப்பு அரண் வழியாக வாகனம் ஒன்றில் விமான நிலையத்தின் சரக்கு விமான முனைக்கு தானியங்கி ஆயுதங்கள், வெடிகுண்டுகள், ஏவுகணை வெடிகுண்டுகள் மற்றும் பிற வெடிபொருட்களோடு ஊடுருவினர். அவர்களில் சிலர் தற்கொலைத் தாக்குதலுக்கான உடையையும் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.


கடந்த பல ஆண்டுகளாக தாலிபான்களுக்கு எதிராக பாக்கித்தான் இராணுவத்தினர் சண்டையிட்டு வருகின்றனர். 2011 ஆம் ஆன்டில் கராச்சியின் மெகரான் கடற்படைத்தளம் தாலிபான்களால் தாக்கப்பட்ட போது 10 கடற்படையினர் கொல்லப்பட்டனர். 17 மணி நேரம் நடந்த இத்தாக்குதலில் இரண்டு தாக்குதல் வானூர்திகளும் சேதமாக்கப்பட்டன.


மூலம்[தொகு]