கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வுகள்: லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 24, 2010


1983 இலங்கை கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் கோர நாட்களை நினைவுகூர்ந்து லண்டனில் நேற்று இரவு நேர கவனயீர்ப்பு பேரணி ஒன்று பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருந்த சிவந்தன் (கோபி) என்பவர் லண்டனில் இருந்து ஜெனீவா வரையான தனது ஐநா நோக்கிய மனிதநேய நடைப்பயணத்தை ஆரம்பித்தார்.


நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும், தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகள், பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும். முகாம்களிலுள்ளவர்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும், மனித உரிமைகளை மதிக்கும்வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


இரவு 10:00 மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள ரொட்ஹில் (Tothill) வீதியில் இருந்து ஆரம்பித்த பேரணி 10:45 அளவில் பிரித்தானியப் பிரதமரது இல்லமான இல.10 டவுணிங் ஸ்றீற்றை (Downing Street) சென்றடைந்தது.


அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் பிரித்தானிய இளையோர் அமைப்பு, நாடு கடந்த தமிழீழ அரசு, அக்ட் நவ் (Act now), பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், மற்றும் நடை பயணத்தை ஆரம்பித்துள்ள சிவந்தன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.


பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற உரைகளையடுத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய சிவந்தனின் நடை பயணம் ஆரம்பித்தது. இவர் பிரித்தானியக் கடற்கரையான டோவரைச் சென்றடைந்து அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், அங்கிருந்து பாரிஸ் நோக்கி நடந்து, பின்னர் ஜெனீவா நோக்கிச் செல்ல இருக்கின்றார்.

மூலம்[தொகு]