காபூலில் இந்தியத் தூதரகம் முன் தற்கொலைத் தாக்குதல்
வியாழன், அக்டோபர் 8, 2009
ஆப்கானியத் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகத்தில் முன்னால் சக்தி வாய்ந்த கார்க் குண்டு வெடித்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர். 63 பேர் படுகாயமடைந்தனர். இத்தற்கொலைக் குண்டுத்தாக்குதலை தாமே நடத்தியதாக தாலிபான்கள் கூறுகிறார்கள்.
அலுவலக நேரம் ஆரம்பமாவதற்கு முன்னதாக காலை 8.27 மணிக்கு வந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை தூதரக கட்டடத்தின் சுற்றுச்சுவரின் வெளியே மோதச் செய்து வெடிக்கச் செய்தான். இந்திய தூதரகத்தையே தாம் இலக்குவைத்ததாக தமது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தாலிபான்கள் கூறியுள்ளனர்.
இதில் தூதரகத்தின் கண்காணிப்பு கோபுரம் வெடித்து நொறுங்கியது.அத்துடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன. தமது தூதரக பணியாளர்கள் எவரும் இதில் கொல்லப்படவில்லை என்று இந்திய வெளியுறவுச் செயலர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானின் பெரிய வெளிநாட்டு கொடையாளி நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
சென்ற ஆண்டு, இதே போன்ற தாக்குதல் இந்தியத் தூதரகத்தின் முன்னால் இடம்பெற்ற போது 60 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
மூலம்
[தொகு]- Sean Maroney "Powerful Car Bomb Blast Hits Afghan Capital". VOA, அக்டோபர் 8, 2009
- "Afghan bomb strikes India embassy". பிபிசி, அக்டோபர் 8, 2009