உள்ளடக்கத்துக்குச் செல்

காம்பியாவில் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 25, 2012

காம்பியாவில் 9 மரணதண்டனைக் கைதிகள் சென்ற வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பன்னாட்டு மன்னிப்பகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த சில நாட்களில் அங்கு மேலும் பலர் தூக்கிலிடப்பட விருப்பதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.


தூக்குத்தண்டனையை எதிர்நோக்கும் அனைத்து 47 பேருக்கும் அடுத்த மாதத்திற்குள் தண்டனை நிறை வேற்றப்படும் என காம்பியாவின் அரசுத்தலைவர் யாகியா ஜாமி ரமழான் பெருநாளை முன்னிட்டு தனது உரை ஒன்றில் கடந்த ஞாயிறன்று அறிவித்திருந்தார்.


காம்பியாவில் கடைசியாக 1985 ஆம் ஆண்டில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. கடந்த வியாழன் இரவு ஒரு பெண் கைதி உட்பட 9 பேர் அவர்களது சிறை அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் மூவர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்றவர்கள்.


அரசுத்தலைவர் தனது திட்டத்தைக் கைவிடவேண்டுமென ஆப்பிரிக்க ஒன்றியம் ஜாமி அவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தது. தூக்குத்தண்டனை பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் அரசியல் கைதிகள், அல்லது முறையான விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டவர்கள் என மன்னிப்பகத்தின் ஆப்பிரிக்காவுக்கான பிரதிப் பணிப்பாளர் பவுலி ரிகாட் தெரிவித்துள்ளார்.


மரணதண்டனை விதிக்கப்பட்ட 47 பேரும் தனியானதொரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பாதுகாப்புத்துறையினரை ஆதாரம் காட்டி ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் அரசுத்தலைவர் ஜாமி மிகவும் உறுதியாக உள்ளார் என அதே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


காம்பியாவில் முன்னாள் தலைவர் தாவ்தா ஜவாரா பதவியில் இருந்த போது மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவது இடை நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் 1995 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து பதவிக்கு வந்த ஜாமி மரணதண்டனையை மீண்டும் சட்டபூர்வமாக்கினார்.


யாகியா ஜாமியின் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஊடக சுதந்திரம் பல பன்னாட்டு அமைப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய அரசுத்தலைவர் தேர்தலில் நான்காவது தடவையாக அவர் வெற்றி பெற்ற போது அவரது மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது "நரகத்திற்குச் செல்லுங்கள், நான் அல்லா ஒருவருக்கே பயப்படுகிறேன்" என பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.


மேற்கு ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய நாடான காம்பியா ஒரு பிரபலமான சுற்றுலா மையம் ஆகும்.


மூலம்

[தொகு]