காரென் போராளிகளுடன் பர்மிய அரசு போர்நிறுத்த உடன்பாடு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 13, 2012

காரென் இனப் போராளிகளுக்கும் பர்மிய அரசுக்கும் இடையில் போர்நிறுத்த நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரென் மாநிலத் தலைநகரில் காரென் தேசிய ஒன்றியத்திற்கும் பர்மிய அரசு அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.


இவ்வுடன்பாட்டின் படி, தகவல் பரிமாற்ற அலுவலகங்கள் அமைக்கவும், பிராந்தியங்களுக்கிடையே போக்குவரத்துகளை ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த 60 ஆண்டுகளாக காரென் மக்கள் தமக்கு அதிக சுயாட்சி வழங்க வேண்டும் எனக் கோரிப் போராடி வருகின்றனர். இவ்வுடன்பாட்டை வரவேற்றுள்ள தேசிய ஒன்றியத்தின் தலைவர் டேவிட் தாவு, "இதுவரையில் பேச்சுவார்த்தைகளே இடம்பெற்றுள்ளன, உண்மையில் எவ்வாறு இதனை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது," என்றார்.


இதற்கிடையில், மேலும் ஒரு தொகுதி கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படவிருப்பதாக நேற்று பர்மிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்திருந்தது. 600 பேர் வரையில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இவர்களில் எத்தனை பேர் அரசியல் கைதிகள் போன்ற விபரம் தெரியவில்லை.


பர்மா 1948 ஆம் ஆண்டில் பிரித்தானியர்களிடம் விடுதலை பெற்றதில் இருந்து அங்கு இனமோதல்கள் இருந்து வருகின்றன. இதனை அடுத்து சிறுபான்மையின மக்கள் பலர் எல்லையைத் தாண்டி தாய்லாந்தில் குடியேறியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.


மூலம்[தொகு]