உள்ளடக்கத்துக்குச் செல்

கிர்கித்தான் பிரதமர் ஒமுர்பெக் பபானொவ் பதவி விலகினார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 1, 2012

கிர்கித்தான் பிரதமர் ஒமுர்பெக் பபானொவ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இவரது பதவி விலகலை சனாதிபதி அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் ஏற்றுக் கொண்டுள்ளதாக சனாதிபதி மாளிகை இன்று அறிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஆளும் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டதை அடுத்து நேற்று தனது அரசைக் கலைத்த பபானொவ், சமூக மக்களாட்சிக் கட்சியை புதிய கூட்டணியை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


தாம் நடைமுறைப்படுத்திய அரசியல், மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைப் புதிய அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் எனத் தாம் நம்புவதாக பபானொவ் கூறினார்.


கிர்கித்தான் பிரதமரை அரசுத்தலைவராகக் கொண்டு இயங்கும் ஒரு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள கட்சிகளின் கூட்டணியே பொதுவாக அரசு அமைக்கிறது. 2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தேர்தல்களை அடுத்து, ஐந்து கட்சிகள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டன. இவற்றில் 4 கட்சிகள் - சமூக-மக்களாட்சிக் கட்சி, அட்டா மேக்கென், குடியரசுக் கட்சி, ஆர் நாமிசு - இணைந்து ஆட்சியமைத்தது. அட்டா சூர்ட் கட்சி எதிரணியில் அமர்ந்தது. இவற்றில் ஆர் நாமிசு, அட்டா மேக்கென் ஆகிய கட்சிகள் இவ்வார ஆரம்பத்தில் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தன.


கிர்கித்தான் அரசியல் சட்டப்படி, கூட்டணி ஒன்று உடையும் போது, பிரதமர் அரசைக் கலைத்துப் பதவியில் இருந்து விலக வேண்டும். இவ்வாண்டு சனவரி மாதத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்த ஒமுர்பெக் பபானொவின் அரசு எட்டு மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்துள்ளது.


2010 சூன் மாதத்தில், நாட்டின் தெற்கில் கிர்கீசு இனத்தவருக்கும், சிறுபான்மை உஸ்பெக்குகளுக்கும் இடையே இடம்பெற்ற வன்முறைகளில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் உஸ்பெக்குகள் ஆவார். 400,000 பேர் இடம்பெயர்ந்தனர்.


மூலம்

[தொகு]