உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ்துமஸ் தீவில் தடுப்பு நிலைய வசதிகளை ஆஸ்திரேலியா அதிகரிக்கிறது

விக்கிசெய்தி இலிருந்து
கிறிஸ்துமஸ் தீவு

ஞாயிறு, நவம்பர் 1, 2009


புகலிடம் கோருவோரை தங்கவைப்பதற்காக கிறிஸ்துமஸ் தீவிலுள்ள தடுப்பு நிலையத்தை விரிவுபடுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிடுகிறது. தற்போது 1200 படுக்கைகளே கிறிஸ்மஸ்தீவு தடுப்பு நிலையத்தில் உள்ளன. இதனை 2200 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 40 மில்லியன் டொலர்களை செலவிடவிருப்பதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை நேற்று சனிக்கிழமை தெரிவித்தது.


இதேவேளை, இந்தோனேசியாவின் ரீயாவு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் "ஓசியானிக் வைக்கிங்" கப்பலில் தங்கியிருக்கும் 78 இலங்கையர்களும் ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தாம் இந்தோனேசியாவில் 4 முதல் 5 ஆண்டுகள் வரை தங்கியிருந்ததாகவும், தம்மை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அகதிகளாக அங்கு பதிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தாம் இனியும் அங்கு திரும்பத் தயாரில்லை என்றும் தம்மை எந்த நாடுகளும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அவுஸ்திரேலியா தயாராகி வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சுங்கக் கப்பலான ஓசியானிக் வைக்கிங் கப்பலின் பணியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 78 இலங்கையரையும் வெளியேற்றுவதற்கு அரசு தயாராகும் அறிகுறியாக இது கருதப்படுவதாக குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் எவான்ஸ் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.


கிறிஸ்மஸ் தீவில் தடுப்பு நிலையத்திற்கு உள்ளீர்க்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் தேவையின் பின்னணியிலுள்ள முக்கிய காரணியாக இலங்கையிலிருந்து ஆட்கள் வருகை தந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கீகரிக்கப்படாத படகுகளில் வருவோரை சட்ட ரீதியாக தடுத்து வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் அதிகளவுக்கு ஈடுபாடு காட்டி வருவதாக பேர்த்தில் வைத்து அமைச்சர் கிறிஸ் எவான்ஸ் கூறியுள்ளார்.

மூலம்