உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்காசியாவைத் தாக்கிய இரண்டு சூறாவளிகள், நூற்றுக்கணக்கானோர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து
மொரக்கொட் சூறாவளி

செவ்வாய், ஆகத்து 11, 2009, தாய்வான்:


கிழக்காசியாவைத் தாக்கிய இரண்டு சூறாவளிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தைவானில் (தாய்வான்) சூறாவளியைத் தொடர்ந்த நிலச் சரிவில் புதையுண்ட 100 பேரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.


தைவானில் மட்டும் அந்த சூறாவளிக்கு 62 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 58 பேரைக் காணவில்லை. அந்தக் கணக்கில் நிலச் சரிவுகளில் புதையுண்டவர்கள் சேர்க்கப்படவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் மிகவும் கடுமையான சூறாவளியினால் நிலச் சரிவுகள் மட்டுமின்றி வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. அந்தச் சூறாவளிக்கு "மொராக்கோட்" என்று பெயரிடப்பட்டுள்ளது.


அந்த சூறாவளி வீசிய சீனாவிலும் ஜப்பானிலும் 23 பேர் நிலச் சரிவுகளிலும் வெள்ளத்திலும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புபணியாளர்களை ஏற்றியிருந்த ஹெலிகாப்டர் ஒன்று தெற்கு தாய்வானில் விபத்துக்குள்ளானது. சூறாவளித் தாக்கியலில் கிராமம் ஒன்று அப்படியே வெள்ள நீரில் சிக்கி மூழ்கி விட்டது. தெற்கு கஹோசியுங் என்ற பகுதியில் உள்ள சியாலின் என்ற கிராமத்தில், ஏராளமான பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இந்தக் கிராமத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புயல் காரணமாக வரலாறு காணாத அளவாக 2.5 மீட்டர் அளவுக்கு அங்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சீனா

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆறு தொடர்மாடிக் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். சீனாவின் ஹெய்யியாங் மாநிலத்தின் பெய்ங்ஹி நகரத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இக்கட்டிட இடர்பாடுகளுக்குள் இருந்து இதுவரை ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.


பிலிப்பைன்சில் வெள்ளம்

ஆசியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து நகரும் மொராகட் சூறாவளியைத் தொடர்ந்து சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


ஜப்பான்


ஜப்பானும் சூறாவளியின் சீற்றத்திற்கு இரையாகி உள்ளது. அங்கு "இத்தாவ்" என்று அழைக்கப்படும் என்ற சூறாவளி மணிக்கு 126 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. முதலில் டோக்கியோவில் வீசும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த சூறாவளி வேறு திசையில் சென்றதாக அதிகாரிகள் கூறினர். கடும் மழையுடன் வீசிய சூறாவளியால் வெள்ளமும் நிலச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.


ஏற்கனவே 6.1 ஆக பதிவான நில நடுக்கம் ஜப்பானை உலுக்கியுள்ளது. நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மண் இறுக்கம் குறைந்திருப்பதால் சூறாவளியைத் தொடர்ந்து நிலச் சரிவுகள் ஏற்படும் என்று ஜப்பானிய வானிலை நிறுவனம் எச்சரித்துள்ளது.

மூலம்