குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சி வெற்றி
குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிவுற்றுள்ளது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின. நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 18, 2017) நடந்தது. தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 77 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 இடங்களிலும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும் போது பாரதிய ஜனதா கட்சி 16 இடங்களைக் குறைவாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 16 இடங்கள் அதிகமாகவும் வெற்றி பெற்றுள்ளது.
மூலம்
[தொகு]- தி இந்து நாளிதழ், 182 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல்: குஜராத் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை - பிற்பகலில் முடிவு தெரியும், டிசம்பர் 18, 2017
- புதிய தலைமுறை, குஜராத்தில் சதத்தை தவற விட்ட பா.ஜ.க, டிசம்பர் 18, 2017