உள்ளடக்கத்துக்குச் செல்

கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு மூழ்கியதில் 23 பேரைக் காணவில்லை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 3, 2009

கொக்கோசு தீவுகள்


இந்தியப் பெருங்கடலின் கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று நேற்று திங்கட்கிழமை மூழ்கியதில் குறைந்தது 23 பேர் காணாமல் போயுள்ளனர்.


அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் என்று நம்பப்படும், 17 பேர் அந்த வழியே திரவ வாயுவை ஏற்றி வந்த கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டனர்.


ஆஸ்திரேலியாவின் வெளிவாரிப் பிராந்தியமான கொக்கோஸ் தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இருக்கின்றன.


உயிர் தப்பியிருக்கக் கூடியவர்களை மீட்பதற்கான பணியில் ஆஸ்திரேலிய ரோயல் பறக்கும் மருத்துவ சேவையின் ஜெட் ஒன்றும் ஈடுபட்டுள்ளது. இந்த மாதிரியான நிகழ்வுகள் இந்தப் பிராந்தியத்தில் தற்போது வழமையாகிவருவதாக இந்த இச்சேவையைச் சேர்ந்த ஸ்டீபன் லாங் ஃபோர்ட் கூறியுள்ளார்.


எவரும் இலகுவில் செல்லாத இந்து மகா சமுத்திரத்தின் அந்தப் பகுதியில், இந்த சிறிய படகு மூழ்கத்தொடங்கிய போது இருளத்தொடங்கிவிட்டது. அந்தப் படகில் வந்தவர்கள் பெரும்பாலும் அகதிகளாக தஞ்சம் கோரிச்சென்றவர்களாக இருக்கக் கூடும். சுமார் 17 பேர் வரை தாய்வான் நாட்டுக் கப்பலால் மீட்கப்பட்டாலும் ஏனைய பலரை இன்னமும் காணவில்லை.


தாம் மிகுந்த கவலை அடைந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த ஆண்டில் மாத்திரம் இலங்கை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 30 படகுகளில் வந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்.

மூலம்