கொங்கோவின் முன்னாள் துணை அதிபருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை
வெள்ளி, ஆகத்து 14, 2009, த ஹேக், நெதர்லாந்து:
போர்க்காலக் குற்றங்கள் தொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ள கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் முன்னாள் துணை அதிபர் சான்-பியர் பெம்பா ஹேகிலுள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க்கப்பட்டுள்ளார்.
பெரும்புகழ்பெற்ற செல்வந்தர் ஒருவரின் வாரிசான சான் பியர் பெம்பா, முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளர் மொபுட்டு செசேய் செக்கோவின் உதவியாளராகவும், கொங்கோவின் மிகப் பிரபலமான பெரும்புள்ளிகளில் ஒருவரும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டுள்ள கொங்கோவின் முன்னாள் இராணுவ அதிகாரமிக்க நபர்கள் நால்வரில் முக்கியமானவருமாவார்.
விமானங்கள் மற்றும், வானொலிக் கருவிகள் மற்றும் தொலைக்காட்சி சேவை நிலையங்களுடன் தொடர்புடைய வர்த்தகங்களில் ஈடுபட்டதன் மூலம் சம்பாதித்த பல நூறு மில்லியன் டொலர்கள் செல்வத்தின் மூலம் கொங்கோவின் பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இடம்பிடித்தார்.
நீண்டகாலமாக இடம்பெற்ற உள்நாட்டுப்போரின் போது கொங்கோவின் விடுதலைக்கான இயக்கம் என்ற உகண்டாவின் ஆதரவுடனான ஆயுதப் படையை வழிநடத்தினார்.
இந்தப் போரின்போது மத்திய ஆபிரிக்க குடியரசிலிருந்த பொதுமக்களை துன்புறுத்தி பாலியல் வல்லுறவு போன்ற கொடுமைகளை போராயுதமாக பயன்படுத்தியதாக இவரது படைமீது குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும், அமைதி உடன்படிக்கையொன்றையடுத்து இவர் 2003ம் ஆண்டில் துணை அதிபராகவும் பதவியேற்றார். ஆனால் மூன்று ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் யோசப் கபிலாவிடம் ஆட்சியை இழந்த பெம்பா தற்போது ஐந்து வகையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- போர்க் குற்றங்களுக்காக லைபீரியாவின் முன்னாள் அதிபர் மீது விசாரணைகள் ஆரம்பம்
- போர்க் குற்றங்களுக்காக சூடான் அதிபரைக் கைது செய்ய ஆப்பிரிக்க ஒன்றியம் மறுப்பு