உள்ளடக்கத்துக்குச் செல்

கொலம்பிய ராணுவம் வெனிசுவேலாவுக்குள் நுழைந்ததால் அந்நாடு கடும் சீற்றம்

விக்கிசெய்தி இலிருந்து
வெனிசுவேலா

திங்கள், ஆகத்து 10, 2009, வெனிசுவேலா:


கொலம்பியாவின் ராணுவம் வெனிசுவேலாவுக்குள் நுழைந்ததாக அந்நாட்டின் சனாதிபதி சாவெய்ஸ் தெரிவித்தார். கொலம்பியாவின் ராணுவத்தளங்கள் சிலவற்றை அமெரிக்க ராணுவம் பயன்படுத்துவதற்கு அண்மையில் கொலம்பியா அனுமதியளித்தது.


இதையடுத்து வெனிசுவேலாவின் அதிகார எல்லைக்குள் அமைந்துள்ள கொலம்பிய ராணுவத் தளங்களில் பயிற்சிகள் ஒத்திகைகள் இடம்பெறவுள்ளன. இதனை முன்னிட்டு கொலம்பிய ராணுவம் படகுகளில் வெனிசுவேலாவுக்குள் நுழைந்தது.


அமெரிக்காவுக்கு இராணுவத்தளங்களை வழங்கும் விடயத்தில் வெனிசுவேலா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தென்னமெரிக்காவுக்குள் காலடி எடுத்து வைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு துணைபோகவேண்டாமென வெனிசுவேலா கேட்டுக்கொண்டபோதும் கொலம்பியா இதை நிராகரித்துவிட்டது. தனது நாட்டில் இடம்பெறும் போதைப் பொருள் கடத்தல், மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா உதவி தேவை என கொலம்பியா தெரிவித்துள்ளது.


கொலம்பிய முகாம்களில் அமெரிக்கப் படையினரின் பிரசன்னத்தை நீடிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான தென் அமெரிக்க தலைவர்களின் மாநாடு ஆரம்பமாகவிருப்பதற்கு சிறிது முன்பே சாவேஷ் இக் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அமெரிக்க பிரசன்னத்தை நீடிப்பது தொடர்பான செய்திகள் வெளியானதிலிருந்தே கொலம்பியாவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையில் இராஜதந்திர சர்ச்சைகள் ஆரம்பமாகியிருந்தன.


கொலம்பிய ராணுவம் தனது நாட்டு எல்லைக்குள் நுழைந்தது அங்கு பாரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பாரிய குற்றம். திடீர் தாக்குதல் என ஜனாதிபதி சாவெய்ஸ் விபரித்தார். 1989ம் ஆண்டுக்கு முன்னர் பனாமாவை அமெரிக்கா ஆக்கிரமிக்க முன்னர் இருந்தது போன்ற நிலையை தனது நாட்டின் தற்போதைய நிலை வரத்திற்கு சாவெய்ஸ் ஒப்பீடு செய்துள்ளார்.


கொலம்பியாவின் அமெரிக்க சார்புப் போக்கைக் கண்டிக்கும் பொருட்டு அந்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுமதி செய்யும் எண்ணெய். எரிவாயு என்பவற்றை நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளார். சர்வதேச சந்தையின் விலைக்கு மாத்திரமே இனிமேல் கொலம்பியாவுக்கு எண்ணெய் எரிவாயுக்கள் வழங்கப்படுமென சாவெய்ஸ் கூறினார்.


ஏழு ராணுவத் தளங்களைப் பாவிப்பதற்கு கொலம்பியா அமெரிக்காவுக்கு அனுமதியளித்தால் வெனிசுவேலா கொலம்பியாவிடையே முறுகல் நிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.


வெனிசுவேலாவின் இராணுவம் உரிய இடத்தை நோக்கி வந்ததும் கொலம்பியப் படைகள் திரும்பிச் சென்றதாகவும் தெரியவருகிறது.

மூலம்[தொகு]