கொலோன் நகரில் 8வது தமிழ் இணைய மாநாடு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 25, 2009, கொலோன், ஜெர்மனி:

செருமனி


உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) எட்டாம் தமிழ் இணைய மாநாடு ஜெர்மனி நாட்டு கொலோன் நகரில் இம்மாதம் 23ம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை 25ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.


ஐரோப்பாவில் முதன் முறையாக நடைபெறும் இத்தகைய மாநாடு, கொலோன பல்கலைக்கழகத் தத்துவ இயல் துறையின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் பொன்கார்ட்ஸ் மற்றும் தமிழ்நாட்டுக் குழுவின் தலைவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பேராசிரியர் எம் அனந்தகிருஷ்ணனின் முன்னிலையில் தொடக்கிவைக்கப்பட்டது. இந்த மூன்றுநாள் மாநாடு கொலோன் பல்கலைகழத்தின் இந்தியப் பண்பாடு, வரலாறு, இலத்தியத்துறை மற்றும் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.


தமிழ் பேசும் அனைத்துலப் பேராளர்களை வரவேற்ற பேராசிரியர் டாக்டர் பொன்கார்ட்ஸ், ஐரோப்பாவின் மையமாக விளங்கும் கொலோனில் இந்திய தகவல் நுட்ப நிறுவனங்கள் செயல்பட ஊக்குவிக்கப்படுவதாகத் தெரிவித்தார். விப்ரோ, மைன்ட்ரீ போன்ற நிறுவனங்கள் அங்கு செயல்படத் தொடங்கிவிட்டன. மாநாட்டின் துணைத்தலைவரான பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், தமிழ்நாட்டிற்கு வெளியே இயங்கும் பல்கலைக்ழகங்களில், கொலோன் பல்லைக்கழகம் 60,000க்கும் மேற்பட்ட தமிழ் நூல் தொகுப்பைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.


தமிழ் நாட்டின் வாழ்த்தைத் தெரிவித்த பேராசிரியர் அனந்தகிருஷ்ணன், அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தொடர்பில் அப்போது தமிழ் இணைய மாநாடு 2010-யும் நடத்துமாறு உத்தமம் அமைப்பைக் கேட்டுக்கொண்டார், தமிழ் இணைய மாநாடு 2010 நடைபெறுவதற்கான எல்லா வசதிகளையும் தமிழ் நாடு அரசு வழங்கும் என அவர் தெரிவித்தார்.


மற்றவர்கள் செய்ததைப் பின்பற்றித் தமிழிலும் அவ்வாறே செய்யாமல் தமிழ்த் தகவல் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கத்தைப் புகுத்திப் புதியனவற்றைத் தோற்றுவித்து மற்றவர்கள் பின்பற்றுமளவுக்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் மேலும் தமது தொடக்க உரையில் கேட்டுக்கொண்டார்.


100,000- க்கும் மேற்பட்ட பொறியியல்துறை சர்ந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்பங்கள் 100க்கும் குறைவாகவே திட்டமிடப்படுவதாக அவர் சொன்னார்.

தமிழ் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிபுணர்கள் எதிர்கொள்ளும் நடப்புப் பிரச்னைகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் பல தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவற்றிலிருந்து தகுந்தவற்றைத் தேர்ந்தெடுப்பது தமது குழுவிற்குப் பெரும் சிரமமாக இருந்ததாகவும் மாநாட்டு நிகழ்சிக் குழுவின் தலைவரும் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் வாசு ரங்கநாதன் தெரிவித்தார்.


கொலோன் நகரம்

பெரும்பாலான ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர் பேராளர்களாக வருகையளித்தவர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்றார். ஆய்வரங்கில் பேசிய மலேசிய நாட்டு திரு முத்து நெடுமாறன் மூன்றாம் தலைமுறை கையடக்கக் கருவிகளில் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும் என்பதை விளக்கிக் காட்டினார், ஐபோன், அன்ட்ரோய்ட், நோக்கியா போன்ற கைத்தொலைபேசிகளில் தமிழ் பென்பொருளைக் கையாளமுடியும் என்பதை விளக்கிய போது குழுமியிருந்தோர் மகிழ்ச்சியுற்றனர். பெங்களூரு இந்திய அறிவியல் ஆய்வுக்கழகப் பேராசிரியர் தகவல் தொழில்நுட்பம் வழி படிப்பறிவு இல்லாதவர்கள் மற்றும் பார்வையற்றோர் ஆகியவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க தொழில்நுட்பத்தை விளக்கிக் காட்டினார். தமிழ் நூல் வாசகத்தை ஒலி வடிவமாக மாற்றிப் பிழையறப் படிக்கும் கணினியை அவர் காட்டினார். மேலும் அக்கணினி ஒருவரின் கையெழுத்தையும் அடையாளங்கண்டு கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளது. கொலோன் பல்கலைக்கழகம் இணையம் வழி சமஸ்கிருத, தமிழ் அகராதிகளை உருவாக்கியுள்ளதைப் பேராசிரியர் தோமஸ் மால்ட்டன் எடுத்துரைத்தார் .


200ம் ஆண்டில் தொடஙகப்பட்ட உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்ற (உத்தமம்) அமைப்பின் கீழ் நடைபெறும் தமிழ் இணைய மாநாடு தமிழ்க் கணினி, தகவல் தொழில்நுட்பம், பல துறைகளில் தமிழ் இணைய வளர்ச்சி ஆகியவை குறித்து கணினித்துறை சார்ந்த நிபுணர்கள் ஒன்று கூடி விவாதிக்கும் அரங்காக இடம்பெற்று வருகின்றது. புலம்பெய்ர்ந்த தமிழர்களும் மாநாடுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலிருந்து 100க்கும் மேலான தமிழ் பேசும் பேராளர்கள் இந்த ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டனர்.

(செருமனியின் கொலோன் நகரில் இருந்து ஆல்பர்ட் பெர்னாண்டோ, தமிழில் சிங்கை பழனி)