கொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 31, 2009, கொழும்பு:


சண்டே டைம்ஸ் பத்தி எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஜே.எஸ் திசைநாயகத்திற்கு 20 ஆண்டு கடுழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விசயசுந்தர இந்த தீர்ப்பை வழங்கினார்.


பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுக்களில் முதல் இரண்டுக்கு தலா ஐந்து வருட சிறைத்தண்டனையும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 10 வருட சிறைத்தண்டனையும் இந்த தீர்ப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.


2006, 2007 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது படையினரால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் போது படையினரால் குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தமது நோத்ஈஸ்ட் மன்த்லி என்ற இதழில் செய்தி எழுதியிருந்தமை தொடர்பில் சட்டமா அதிபர், திசைநாயகத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.


இதன் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிரதிவாதியான திசநாயகத்தை குற்றவாளி என இனங்கண்ட நீதிமன்றம் 20 வருட கடுழிய சிறைத்தண்டனையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.


இதேவேளை இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக திசநாயகத்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட திசநாயகம், விசாரணைகள் ஏதுமின்றி மொத்தம் 426 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விடுவிக்கும்படி அனைத்துலக ஊடக அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன.


மூலம்[தொகு]