சகாரா பாலைவனப் பகுதியிலிருந்து சூரிய ஆற்றல் மூலம் ஐரோப்பாவிற்கு மின்சாரம்
வியாழன், சூலை 16, 2009, சுவிட்சர்லாந்து:
ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனப் பகுதியிலிருந்து சூரிய ஆற்றல் மூலம் ஐரோப்பாவிற்கு மின்சாரம் வழங்கும் புதிய திட்டமொன்று குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பாவின் பல நாடுகளும் எரிசக்தி பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிசக்தி பற்றாக்குறைக்கு தீர்வாக சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிய சூரிய கலங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு மின்சாரத்தை வழங்கும் பாரிய திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்படி நூற்றுக்கணக்கான வெப்ப ஆலைகள் வட ஆப்பிரிக்க பாலைவனப் பகுதிகளில் நிறுவப்பட்டு அதன் மூலம் பெறப்படும் ஆற்றல் கடலடி கேபிள்கள் மூலம் ஐரோப்பாவிற்கு எடுத்துவரப்படும். இத்திட்டம் முடிவடைவதற்கு 40 ஆண்டுகள் செல்லலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் எரிசக்தி தேவையின் 15 விழுக்காடு இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் எனவும் வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் பயனடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுமார் 555 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், முன்னணி நிறுவனங்களுக்கு இடையே ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.