உள்ளடக்கத்துக்குச் செல்

சதுரங்க மேதை பாபி ஃபிஷரின் மரபியல் சோதனை வெளியிடப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 18, 2010

காலஞ்சென்ற அமெரிக்க சதுரங்க மேதை பாபி ஃபிஷரின் டி.என்.ஏ சோதனை முடிவுகளின் படி, பிலிப்பீன்சைச் சேர்ந்த ஒன்பது வயதுப் பெண் பிள்ளையின் தந்தை அவரல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்தார்.


ஐசுலாந்தில் பாபி ஃபிஷரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்

சொத்துரிமை தொடர்பாக பாபி ஃபிஷரின் உடல் தோண்டி எடுக்கப்பட ஐசுலாந்தின் நீதிமன்றம் ஒன்று அனுமதி அளித்திருந்தது. அதன் படி, அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடலின் திசுக்கள் மரபுப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.


9 வயது ஜிங்கி உஅங் என்ற பெண் குழந்தை பிஷரின் தந்தை அல்ல என முடிவுகள் காட்டுவதாகவும், இதனால் இவ்வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும் வழக்கறிஞர் தோர்டர் பொகாசன் தெரிவித்தார்.


2008 ஆம் ஆண்டு ஐசுலாந்தில் காலமான பாபி ஃபிஷர் இறக்கும் போது எவ்வித மரண சாசனத்தையும் எழுதி வைக்கவில்லை. இவரது சொத்து 2 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிஷரின் முன்னால் மனைவி எனத் தம்மை அழைக்கும் சப்பானைச் சேர்ந்த முயோக்கோ வட்டாய் என்பவரும், பிஷரின் இரண்டு மருமக்களும் அவரது சொத்துக்களுக்கு உரிமை கோருகின்றனர். அத்துடன் அமெரிக்க அரசும் உரிமை கோரியுள்ளது. ஃபிஷரின் வருமான வரி இன்னும் நிலுவையில் உள்ளதாக அமெரிக்க அரசு கூறுகிறது.


சொத்துச் சம்பந்தமான வழக்கு இன்னமும் நடைபெற்று வருவதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]