உள்ளடக்கத்துக்குச் செல்

சனியின் துணைக்கோள் டைட்டனில் மாபெரும் ஐதரோகார்பன் ஆறு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 14, 2012

பூமியின் நைல் நதியைப் போன்ற மாபெரும் நதி ஒன்றை சனிக் கோளின் துணைக்கோளான டைட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். 400 கிமீ நீளமான இந்த நதி பெருங்கடல் ஒன்றினுள் பாய்வது அவதானிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் நாசா, மற்றும் ஐரோப்பாவின் ஈசா ஆகியவற்றின் கூட்டுத்திட்டமான காசினி விண்கலமே இத்தகவலைப் பூமிக்கு அனுப்பியுள்ளது. காசினி விண்கலம் பூமிக்கு அப்பால் இவ்வாறான ஒரு பெரும் நதி கட்டமைப்பொன்று அவதானிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.


பூமிக்கு அடுத்தபடியாக டைட்டன் துணைக்கோளே பெருங்கடற்பரப்புகளைக் கொண்டது என வானியலாளர்கள் கருதுகின்றனர். 400 கிமீ நீளமான இந்நதி ஐதரோகார்பன் நிறைந்த கடலினுள் பாய்கிறது. கடலில் உள்ள திரவநீர் டைட்டனின் குளிர் காரணமாக எப்போதும் உறைந்தே காணப்படும், ஆனாலும் எத்தேன், மெத்தேன்களான ஐதரோகார்பன்கள் திரவநிலையிலேயே காணப்படுவதற்கு ஏற்ப சூடான நிலை அங்கு காணப்படுகிறது.


காசினி விண்கலம் 1997 ஆம் ஆண்டில் ஏவப்பட்டது. காசினியுடன் இணைக்கப்பட்ட ஹியூஜென்சு என்ற விண்ணுளவி தாய்க்கப்பலில் இருந்து 2004 டிசம்பர் இல் பிரிந்து 20 நாட்கள் தொடர்ந்து 36,000 மைல் தூரம் பயணம் செய்து டைட்டனில் 2005 சனவரி 14 இல் தரையிறங்கியது. இதுவே டைட்டன் துணைக்கோளில் மட்டுமல்லாது வெளிப்புற சூரியக் குடும்பத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலமும் ஆகும். பூமியில் இருந்து அதி கூடியளவு தூரத்தில் தரையிறங்கிய ஒரேயொரு விண்கலமும் இதுவாகும். ஹியூஜென்சு டைட்டனில் தரையிறங்கியதில் இருந்து 90 நிமிடங்கள் வரை செய்திகளை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. டைட்டானின் தள வெப்பத்தில் (-179 செ), விண்கலத்தின் மின்கலன்கள் நீடித்து இயங்க முடியாமல் உறைந்து போய் விட்டன. ஆனாலும் காசினி தாய் விண்கலம் கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக சனிக்கோளைச் சுற்றி வருகிறது. இது தொடர்ந்து சனிக்கோளையும் அதன் நிலவுகளையும் பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறது. அத்துடம் காலவோட்டத்தில் அவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.


மூலம்

[தொகு]